Saturday, February 26, 2011

ராதா மோகன் vs சங்கர்
சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்று சொல்லி பல கோடிகளை கொட்டி, பலத்த ஆரவாரத்துடன் வந்தது சங்கரின் ரோபோ. ஆனால் 20-30 வருடங்களுக்கு வந்த எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படத்தின் கதைக்கும் எந்திரன் கதைக்கும் பெரிய இடைவெளியில்லை என்பதை ஒரு பதிவர் பதிவுசெய்திருந்ததை பலர் படித்திருப்பார்கள். வழக்கம் போல பாடல்கள், ஹீரோவை தவிர மத்தவர்கள் எல்லோரும் டம்மிபீஸ்கள் என்ற வகையில் காமெடி, அயிரம் பேர்களை அடித்தாலும் திருப்தி படாத அதீத ஆக்‌ஷன்.. கேட்டால் இது கமெர்ஷியல் படம். இப்படித்தான் எடுக்க முடியும் என்ற சப்பைக்கட்டு. A-B-C  என்று எல்லா சென்டர்களிலும் வெற்றியடைய சங்கரின் பார்மெட்டை விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழ் இயக்குனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

ஆனாலும் என்ன? இன்று தமிழ் திரையுலகில் இருக்கும் கமர்ஷியல் உதவி டைரக்டர்களின் ஆதர்ஷம் சங்கர் தான். சங்கரை போல ஒரு மெகா பட்ஜெட் படமாவது பண்ணினால்தான் ஜென்மபிராப்தி என்று இருக்கிறார்கள். சங்கரைப் போல படம் பண்ணவேண்டும் என்று மினிமம் 10-15 கோடி பட்ஜெட்டில் கதை பண்ணிக்கொண்டு வாய்ப்புக்காக 10-15 வருடங்களாக காத்திருக்கும் உதவி இயக்குனர்களை எனக்கு தெரியும். நட்சத்திரங்களின் கால்ஷீட் இல்லாமல் 10-15 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் செய்யமுடியாது. அறிமுக நடிகர்கள் முதல் படத்திலேயே சாகசம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த காரணத்தால் (திறமையிருந்தும்) நட்சத்திர நடிகர்களின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் பட்டாளத்தின் பாடு சொல்லிமாளாது.


இந்த கலாச்சார சூழலில் வந்துள்ளது ராதாமோகனின் பயணம். ராதா மோகனின் பயணம் தமிழில் ஒரு மிக நல்ல வரவேற்க்கத்தக்க முயற்சி. ஏனென்றால் பாடல்கள், கதையுடன் ஒட்டாத காமெடி ட்ராக்குகள் ஆகியவை இல்லாமல், ஒரு சுத்த ஆக்‌ஷன் திர்ல்லர் படம் தமிழில் எடுக்கமுடியாது என்று மொன்னையாக வாதத்தை வைத்து இனியும் எந்த டைரக்டரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல எல்லா கேரக்டர்களும் கண்ணியமாக நடத்தப்பட்டும், யாரும் புண்படுத்தப்படாமலும் எல்லோரும் சிரிக்கும் வகையில் இண்டெலிஜண்டாக காமெடி பண்ணாலாம் என்பதை நிருப்பித்து இருக்கிறார் ராதாமோகன். ஆக்‌ஷன் ஹீரோவும் யதார்த்தை மீறிய பாத்திரம் இல்லை. கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டது அல்ல பயணம். சன் டீவியினரோ கலைஞர் டீவியினரோ விநியோகம் செய்துள்ள படம் கூட இல்லை. மீடியம்/லோ பட்ஜெட்டிலும் A-B-(கொஞ்சம்)C சென்டர்களில் ஜெயிக்கும் ஒரு பார்மெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்.

ராதாமோகனின் வளர்ச்சிப்பாதையையும் கவனிக்கவேண்டும். சங்கர் போல் இல்லாமல், லோ-பட்ஜெட் படத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, இன்று முதல்தர டைரக்டர் அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார்.

பயணம் படம் வருவதற்கு முன்னால்,  இந்த ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் கதையை அறிமுக இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருந்தால் அவர் என்ன கதியாயிருப்பார்கள் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியும். 
 
இனிமேல் அப்படி இல்லை. உதவி இயக்குனர்கள் தைரியமாக பயணத்தை உதாரணமாக காட்டி, யத்தார்த்த ஆக்‌ஷன் கதைகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லலாம். ஒரு புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகிறார் ராதாமோகன். தயாரிப்பாளர்களும் ராதாமோகன் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவேண்டும். பாடல்/டான்ஸ்/தனி-காமெடி இல்லாமலும் கமர்ஷியல் படம் எடுக்கலாம் என்பது புரிந்து கொண்டால் ஷேமம்.

ஆக அடுத்த தலைமுறை இயக்குனர்களிடம் சங்கரா இல்லை ராதாமோகனா யார் வழியில் போவது என்று ஒரு போராட்டம் நடக்கப்போகிறது.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...