Sunday, February 27, 2011

பதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியின் சர்டிபிகேட்


”தென்மேற்கு பருவக்காற்று படம் மக்களிடையே சென்றடைய பதிவர்களின் விமர்சனங்கள் மிகவும் உதவின. இதுபோன்ற சிறு படங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பதிவர்களுக்கு இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு உதவிய பதிவர்களுக்கு என் நன்றி”

- 26.02.2011, டிஸ்கவர் புக் பேலஸில் சீனு ராமசாமி கூறியது.


தமிழ் திரையுலகில் ஒரு ரசனை மாற்றத்தை பதிவர்கள் முயன்றால் நிச்சயம் கொண்டுவர முடியும் – என்ற கதை முன்னேற்றக் கழகத்தின் வாதத்தை சீனு ராமசாமி வழிமொழிந்துள்ளார். இதற்கு அவருக்கு ஒரு நன்றி.

பிரபல தொலைக்காட்சி சேனல்கள் இப்போது திரை விநியோகஸ்தர்களாக பரிணமித்து, தாங்கள் விநியோகிக்கும் படங்களை இடைவிடாத விளம்பரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். இந்த முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில் தோற்றாலும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவது சிறு படங்கள் தான்.

இன்று ஒரு படம் தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம் அதற்கு விளம்பரம் கொடுக்க ஆகும் செலவு. இதனால் கதை சார்ந்த சிறு படங்கள் தயாரவதற்கும், வெளிவருவதற்கும் பெரும் இடையூறுகள் எற்பட்டுள்ளன. இந்த சூழலில் கதை சார்ந்த சிறு படங்களை ஆதிர்ப்பதன் மூலம் பதிவர்கள் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வருவதற்கு வழிவகுக்கமுடியும்.

- கமுக கொ.ப.செ.

Saturday, February 26, 2011

பதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.

ராதா மோகன் vs சங்கர்
சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்று சொல்லி பல கோடிகளை கொட்டி, பலத்த ஆரவாரத்துடன் வந்தது சங்கரின் ரோபோ. ஆனால் 20-30 வருடங்களுக்கு வந்த எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படத்தின் கதைக்கும் எந்திரன் கதைக்கும் பெரிய இடைவெளியில்லை என்பதை ஒரு பதிவர் பதிவுசெய்திருந்ததை பலர் படித்திருப்பார்கள். வழக்கம் போல பாடல்கள், ஹீரோவை தவிர மத்தவர்கள் எல்லோரும் டம்மிபீஸ்கள் என்ற வகையில் காமெடி, அயிரம் பேர்களை அடித்தாலும் திருப்தி படாத அதீத ஆக்‌ஷன்.. கேட்டால் இது கமெர்ஷியல் படம். இப்படித்தான் எடுக்க முடியும் என்ற சப்பைக்கட்டு. A-B-C  என்று எல்லா சென்டர்களிலும் வெற்றியடைய சங்கரின் பார்மெட்டை விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழ் இயக்குனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

ஆனாலும் என்ன? இன்று தமிழ் திரையுலகில் இருக்கும் கமர்ஷியல் உதவி டைரக்டர்களின் ஆதர்ஷம் சங்கர் தான். சங்கரை போல ஒரு மெகா பட்ஜெட் படமாவது பண்ணினால்தான் ஜென்மபிராப்தி என்று இருக்கிறார்கள். சங்கரைப் போல படம் பண்ணவேண்டும் என்று மினிமம் 10-15 கோடி பட்ஜெட்டில் கதை பண்ணிக்கொண்டு வாய்ப்புக்காக 10-15 வருடங்களாக காத்திருக்கும் உதவி இயக்குனர்களை எனக்கு தெரியும். நட்சத்திரங்களின் கால்ஷீட் இல்லாமல் 10-15 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் செய்யமுடியாது. அறிமுக நடிகர்கள் முதல் படத்திலேயே சாகசம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த காரணத்தால் (திறமையிருந்தும்) நட்சத்திர நடிகர்களின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் பட்டாளத்தின் பாடு சொல்லிமாளாது.


இந்த கலாச்சார சூழலில் வந்துள்ளது ராதாமோகனின் பயணம். ராதா மோகனின் பயணம் தமிழில் ஒரு மிக நல்ல வரவேற்க்கத்தக்க முயற்சி. ஏனென்றால் பாடல்கள், கதையுடன் ஒட்டாத காமெடி ட்ராக்குகள் ஆகியவை இல்லாமல், ஒரு சுத்த ஆக்‌ஷன் திர்ல்லர் படம் தமிழில் எடுக்கமுடியாது என்று மொன்னையாக வாதத்தை வைத்து இனியும் எந்த டைரக்டரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல எல்லா கேரக்டர்களும் கண்ணியமாக நடத்தப்பட்டும், யாரும் புண்படுத்தப்படாமலும் எல்லோரும் சிரிக்கும் வகையில் இண்டெலிஜண்டாக காமெடி பண்ணாலாம் என்பதை நிருப்பித்து இருக்கிறார் ராதாமோகன். ஆக்‌ஷன் ஹீரோவும் யதார்த்தை மீறிய பாத்திரம் இல்லை. கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டது அல்ல பயணம். சன் டீவியினரோ கலைஞர் டீவியினரோ விநியோகம் செய்துள்ள படம் கூட இல்லை. மீடியம்/லோ பட்ஜெட்டிலும் A-B-(கொஞ்சம்)C சென்டர்களில் ஜெயிக்கும் ஒரு பார்மெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்.

ராதாமோகனின் வளர்ச்சிப்பாதையையும் கவனிக்கவேண்டும். சங்கர் போல் இல்லாமல், லோ-பட்ஜெட் படத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, இன்று முதல்தர டைரக்டர் அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார்.

பயணம் படம் வருவதற்கு முன்னால்,  இந்த ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் கதையை அறிமுக இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருந்தால் அவர் என்ன கதியாயிருப்பார்கள் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியும். 
 
இனிமேல் அப்படி இல்லை. உதவி இயக்குனர்கள் தைரியமாக பயணத்தை உதாரணமாக காட்டி, யத்தார்த்த ஆக்‌ஷன் கதைகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லலாம். ஒரு புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகிறார் ராதாமோகன். தயாரிப்பாளர்களும் ராதாமோகன் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவேண்டும். பாடல்/டான்ஸ்/தனி-காமெடி இல்லாமலும் கமர்ஷியல் படம் எடுக்கலாம் என்பது புரிந்து கொண்டால் ஷேமம்.

ஆக அடுத்த தலைமுறை இயக்குனர்களிடம் சங்கரா இல்லை ராதாமோகனா யார் வழியில் போவது என்று ஒரு போராட்டம் நடக்கப்போகிறது.


Tuesday, February 22, 2011

தமிழ் மசாலா படங்களின் ரெசிபி – 2ஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள்.

ஆனால் அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து

உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்ன?

சிம்பிள். ஒவ்வொரு கேரக்டரும் ஒரு ஜான்ரே. ஹீரோ க்‌ஷன் ஜான்ரே. ஹிரோயின் ரொமான்ஸ் ஜான்ரே. வில்லன் ஹாரர் ஜான்ரே. காமெடியன்/ஆண்டி ஹீரோ காமெடி ஜான்ரே.  சுத்த மசாலா படங்களில் விசுவல் மேக்கிங், மியூசிக், எடிட்டிங் ஸ்டைல் எல்லாமே வேறு வேறு கேரக்டர் வரும்போதும் மாறிகொண்டேயிருக்கும்.

பல படங்களில் அக்‌ஷன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம், ரொமான்ஸ் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில/ஹிந்தி ரொமான்ஸ் படம், வில்லன் சீக்குவன்ஸ் ஒரு ஆங்கில ஹாரர் படம் என்று கரம்மசாலா மிக்ஸாக இருக்கும். இப்படி ரீமிக்ஸ் செய்வதால் கதை உரிமையை கூட சட்ட முறைப்படை வாங்கவேண்டியதில்லை.

இத்தனை நாட்கள் இந்த               பார்முலா நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? இதில என்ன பிரட்சனை என்று கேளுங்களேன் ப்ளீஸ..

மது டீவி சேனல்களுக்கு வேண்டுமானால் இது நல்ல சிஸ்டம். ஒரு படத்தை பாடல்கள், காமெடி ட்ராக் என்று அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பிட்டுபிட்டாக ஓசியிலேயே மியூசிக் சானல், காமெடி சானல் என்று திருப்பி திருப்பி காட்டி காசு பண்ணிக்கொள்ளலாம். ஆனால் காசு கொடுத்து தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் அவர்கள் கொடுத்த காசுக்கான கதை-திரைக்கதை ஐட்டங்கள் கிடைக்கிறதா? இல்லவே இல்லை.

ஏனென்றால் இதுபோன்ற மசாலா படங்களில் சீரியஸாக கதை சொல்ல வாய்ப்பே இல்லை. ஒரு மிகப் பெரிய சீரியஸான சமூகப் பிரட்சனையை கூட இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்பாட்டங்கள்/போராட்டங்கள் போல அபத்தமாக மாற்றிவிடுகிறார்கள். சினிமா என்பது வெறும் பாடல்கள், ரொமான்ஸ் காட்சிகள், பைட் சீன்கள், காமெடி பிட்டுகள் கலந்த மிக்ஸர் தானா?சமீப காலத்தில் மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து இந்த பார்முலாவில்லிருந்து விலகி எடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் செய்,
பயணம் மற்றும் நடுநசி நாயகள். இந்த படங்களின் முயற்சியை முதலில் ஊடகங்கள் குறிப்பாக வலைப்ப்திவர்கள் பாராட்டி வரவேற்கவேண்டும். இந்த படங்களின் வெற்றி-தோல்வி இந்த படங்களில் கதை ஒன்றே ஒரு படத்தின் பிரதானம் என்ற நேர்மை இருக்கிறது. இந்த படங்களின் ஒரு படம் ஒரு ஜான்ரேஎன்ற பார்மெட் தமிழ்திரையுலகில் தீயாக பரவவினால்,  அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் உலக திரைப்பட விழாக்களில் தமிழ் படங்கள் போட்டிபோட்டு ஜெயிப்பது நிச்சயம்.

Monday, February 21, 2011

இனி கதைகள் காலம் – I : தமிழ் ரசனை மாறவேண்டும்
(பின்) நவீன காலத்தில் தமிழர்கள்

டெக்னாலஜியை வாழ்வாதாரமாக கொண்டு ஒவ்வொரு வருடமும் கல்லூரியை விட்டு வெளிவரும் இரண்டு இலட்சம் இன்ஜினியர்கள் ஒரு பக்கம். முறையான தொழில்கல்வி இல்லாமல் தொழில்நகரங்களுக்கு குடிபெயர்ந்துகொண்டிருக்கும் பல இலட்சம் மக்கள் ஒரு பக்கம் என்று நமது தமிழ்சமுதாயமும் உலகமயமாகிக் கொண்டு தானிருக்கிறது இந்த உலகமயமாதலின் விளைவாக இன்ஜினியர்கள் மட்டுமல்ல. கோடிக்கணக்கில் சாதாரண மக்களும் தங்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈசன் படத்தில் வருவதைப்போல மனிதர்கள் - இந்துமதமே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்த ஆதிமதத்தின் காலத்திலிருந்து, ஒரே தாவலில் நைட்கிளப்-டேட்டிங்-லிவிங்டுகெதர்-(பின்)நவீனத்துவம் காலத்திற்கு தாவுகிறார்கள். இதில் ஈசனின் குடும்பத்தைப்போல் எத்தனை குடும்பங்கள் சிதறிசின்னாப்பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது? இனம்புரியாத எதிர்களால் ஏன் தோற்றோம், எப்படி தோற்கிறோம் என்பதையேனும் எத்தனை குடும்பங்கள் புரிந்துகொள்கின்றன?
விவசாயம் சார்ந்த சமூகத்திலிருந்து தமிழ் சமுதாயம் எந்திர தொழில்சார்ந்த நவீன சமூகத்திற்கும், எந்திரதொழிலிற்கு அடுத்த கட்டமான இன்றைய அமெரிக்கா-ஐரோப்பா-ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பின்-நவீன சமூகத்திற்கும் மாறிக்கொண்டிருக்கிறோம். நமது சமூகம் ஆதர்சமென்று நினைத்து கண்மூடித்தனமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இலக்கான பின்-நவீனத்துவ சமூகத்தின் இன்றைய நிலையென்ன? அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் தனிமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (Ref: Bowling Alone ). கூட்டுக்குடும்பம் தேய்ந்து நியூக்கிளியர் குடும்பம் ஆகி, பிறகு நியூக்கிளியர் குடும்பம் தேய்ந்து ஒரு-பெற்றோர் குடும்பம் (Divorced-Single Parent Family) மெஜாரிட்டியாகி ஆகிவிட்டது.

இன்று தமிழகத்திலும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டது. சிதையும் குடும்பங்களுக்கு காரணமான வில்லன்கள் : ஊடக-சமூக-பொருளாதார சக்திகளின் தாக்கங்கள்/பாதிப்புக்கள். ஊடக-சமூக-பொருளாதார சக்திகள் நம் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கும் புரியவைக்கும் கருவி எது?குடும்பம் என்பது கணவன்-மனைவி மட்டும் அல்ல. தமிழகத்தில் பல தலைமுறை மனிதர்கள் (தாத்தா,அப்பா-அம்மா,குழந்தைகள்) இன்னும் ஒரே குடும்பமாக நகரத்தில் சின்னச்சின்ன பிளாட்களில் வாழ்க்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒவ்வொரு பிரட்சனை. அம்மாவாசை தோறும் குலதெய்வ கோயில்களுக்கு செல்பவர் ஒரு புறம். ஒரே நிறுவனத்தில் வாழ்நாள் முழுதையும் கழித்தவர்கள் ஒரு புறம். வருடாவருடம் வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ளும் நிலையற்ற இளைய தலைமுறையினர் ஒரு புறம். காதல், கல்யாணம் போன்ற முக்கியமான விஷயங்கள் இவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை (கெளரவகொலைகள்-ஒருவனுக்குஒருத்தி-லிவிங்டூகெதர்) வெளிச்சம் போட்டுகாட்டிவிடுகிறது. இந்த தலைமுறைகள் ஒருவரை எப்படி புரிந்துகொண்டு இணக்கமாக வாழமுடியும்?தமிழகத்தில் வந்த முதல் சமூகபுரட்சி:
                                                          
விவசாய சார்ந்த சமூகத்திலிருந்து நவீனத்துவ சமுதாயமாக மிகப்பெரிய கலகமில்லாமல் எநத சமூகமும் மாறவில்லை என்பது வரலாற்றின் உண்மை. இந்த சமூக தாவலுக்கு தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டாமா? இந்த தயார்படுத்தலை முதலில் செய்தது  திராவிடர் இயக்கங்கள்.

தொழில்புரட்சி ஏற்பட்டதற்குபின், திராவிடர் இயக்கங்கள், தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது. அன்றைய சமுதாயத்தில் தமிழர்களின் அவலத்திற்கு காரணம் மதமும், மதம்-சார்ந்த தத்துவங்களுமே என்பதை உணர்ந்து மதம்-சாதி சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சமூகநீதி குரல் கொடுத்தனர். திராவிட இயக்கங்களின் ஒரு கிளை சமூகநீதி கோரிக்கையை அரசியல் மூலம் வெற்றிகரமாக கொண்டுவந்தபின் இந்த இயக்கங்களின் ஆதாரநோக்கம் நிறைவேறிவிட்டது. பிறகு இந்த இயக்கங்களின் மற்ற கொள்கைகள் பிசுபிசுத்து வலுவிலந்துவிட்டது.

இன்றைய நிலை

நேருவின் தயவாலும் திராவிட இயக்கங்களின் தயவாலும் இன்று நிறைய மக்கள் மிடில்கிளாஸ் ஸ்தானத்திற்கு வந்துவிட்டோம். இன்று தமிழ்நாட்டில் கிராமத்தில் இருப்பவர்களைவிட நகரத்தில் இருப்பவர்களே அதிகம். கிட்டத்தட்ட எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறோம். இண்ட்டர்நெட் 30-40 சதவிகித வீடுகளில் உள்ளது. ஆனால் இவையெல்லாம ஹார்ட்வேர் (Hardware).மேலைநாடுகளின்  டெக்னாலஜியை நுகர்பொருட்களாக இறக்குமதி செய்துகொண்ட நாம் டெக்னாலஜியில் புலிகளாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதில் வரும் சாப்ட்வேர் கலாச்சார பொருட்கள் - நம் மக்கள் தயாரிப்பது. இதன் தரம்?

நாம் டெக்னாலஜியில் புலிகள் என்பது எத்தனை பெரிய பொய்-மாயை என்பதை நமது எம்.என்.சி. சாப்ட்வேர் இன்ஜினியர்களை கேட்டாலே விளக்கமாக சொல்வார்கள் கடந்த ப்த்து-இருபது ஆண்டுகளில் நமது கல்வித்துறையில் வந்துள்ள இன்னொரு மிகப்பெரிய மாற்றம் கலை-சமூகம் சார்ந்த படிப்புக்கள், அடிப்படை சயின்ஸ் சார்ந்த படிப்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டோம். இதனால் இன்றைய டெக்னாலஜி சார்ந்த உலக கட்டமைப்பில் நமது சமூகம் அந்நியபபட்டு மிகவும் அவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா?

போன தலைமுறையின் சமூகநீதி அரசியலால் இன்று சாதிசேற்றில் சிக்கிவிட்டனர். நேருவின் சோஸியலிஸ்ட் பொருளாதாரம் சார்ந்த சமூகத்திற்கு இடஒதுக்கிடு அரசியல் ஓகே. ஆனால் இன்றைய கேபிடலிஸ்ட் சமூகத்திற்கு சாதி அரசியல் காலாவதியாகிவிட்டது அல்லவா? ஆனால் இன்று இருக்கும் திராவிட இயக்கங்கள் சாதி ஓட்டுவங்கியை கையில் வைத்துக்கொண்டு சமூகத்தை சீரலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த சமூகப்புரட்சி:

உலகமயத்தின் தாக்கத்தால் தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூகமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று மிகப்பெரிய சமூகமாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்தில், திராவிடர் இயக்கங்கள் பாதியில் விட்டுச் சென்றுவிட்ட சமூகப்புரட்சி மீண்டும் வரவேண்டும். அதற்கு முதலில் நமது சமூகம் அடையவேண்டிய அடுத்த கட்ட நிலை என்ன என்பதை வரையறுக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள் வெறுத்து ஒதுக்கிய பிராமின சமூகமே  நமக்கு நமது அடுத்தகட்ட முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என்பது Irony ஆனாலும் அதுவே நிஜம். பொருளாதாரத்தில் ஓரளவாவது முன்னேறிவிட்ட நாம், இதற்கு அடுத்த கட்டமான இலக்கியம், விளையாட்டு, சமூகம், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தில் முன்னேறவில்லை. ஒரு சமூகமாக தமிழருக்கு அடுத்த கட்டம் என்ன? நோபல், ஒலிம்பிக், ஆஸ்கார்/கான்ஸ் (Cannes) விருதுகள், E&Y தொழில்முனைவோர் விருதுகள் என்றிருக்க வேண்டாமா?

மக்கள் தொகையிலும் நிலபரப்பிலும் தமிழகத்திற்கு நிகரான பிரான்ஸ்-ஜெர்மனியின் சாதனைகளோடு நம்மை ஒப்பிட முடியுமா? நம்மிடம் மாறுதலுக்கான முயற்சிகள் கூட இருப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் இந்த மாறுதலை கொண்டுவர முனையப்போவதில்லை. ஏனென்றால் இந்த மாறுதல் அவர்களின் இப்போதைய சாதி-வாரிசு அரசிய்லையே மாற்றி முழுமையான மக்களாட்சி மலர வழி வகுக்கும்.

மீடியா புரட்சி:


மேலைநாடுகளில் தொழிற்புரட்சியின் (Industrial Revolution) போது டெக்னாலஜி மட்டும் மாறவில்லை. சைக்காலஜி, சமூகவியல், அழகியல் என்று மனித சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களை சென்றடையவற்கு நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும், அவை சார்ந்த மீடியாக்களுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. நாவல்களின் கதாபாத்திரங்களும்  திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் சிக்கலான சைக்காலஜி தத்துவங்கள் (ப்ராயிட், ஜங், ழகான்) அன்றாட வாழ்வில் எப்படி தாக்கம் ஏற்படுகிறது என்பதை சாமானியர்களுக்கும் புரியவைத்தன. இந்த நிதர்சனங்கள் கடவுளற்ற விஞ்ஞானம் சார்ந்த சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்தது.

ஜப்பானில் இந்த சமூகமாற்றம் நிகழ்ந்தபோது இந்த மாற்றங்களை மையமாக வைத்து ஓசு (OZU) போன்ற இயக்குனர்கள் எடுத்த படங்களே
புராண-ஆன்மீக கருத்துகளைவிட இன்று மேலைய சைக்காலஜிட்களின் கருத்துக்களே இன்றைய் சமூகசூழலுக்கு (தமிழகத்திலும்) ஏற்றவாறு உள்ளன. சாமனிய மனிதருக்கும் புரியும் படி இந்த கருத்துக்களை மையமாக வைத்து தமிழில் இன்று எஸ்.ராவின் துயில் நாவல் போன்ற இலக்கியப்படைப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதுபோன்ற நாவல்கள் படிப்பவர்கள் வாழ்க்கையை புதியகோணங்களில் பார்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நடைமுறை வாழ்க்கை பிரச்சனைகளில் புதிய தீர்வுகளை ஆலோசிக்கத் துவங்குவார்கள்.ஆனால் இலக்கியம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத ந்மது சமூகத்தில் அனைத்து தர மக்களையும் சென்றடைய சினிமாவும் டீவியுமே சரியான மீடியாக்கள். ஆனால் இன்றைய சினிமாவும் டீவியும் வெறும் கனவுலக பேண்ட்சிகளிலேயே திளைத்திருக்கிறது.

ஸ்டார்-வார்ஸ், ஈ.டீ., பேக் டூ த ப்யூச்சர் போன்ற படங்களை பார்த்த போன தலைமுறை இளைஞர்கள் பலர் விஞ்ஞானி ஆவது ஒரு கவர்ச்சிகரமான கரீயராக (career) நினைத்து, அதற்காக உழைத்து, விஞ்ஞானி ஆனார்கள். இன்று தமிழகத்தில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் சமுதாயம் வைக்கும் ரோல்மாடல்கள் யார்? தமிழில் ரோல்மாடல்கள் இல்லாததால் அந்நியர்களையே ரோல்மாடல்களாக கொண்டால், குழந்தைகள் அவர்களது ரோல்மாடல்கள் இருக்கும் நாடுகளுக்குத்தானே புலம்பெயர்ந்து செல்வார்கள்? ஈழத்தைவிட்டு தமிழர்கள் புலம்பெயர்ந்ததை பற்றி புலம்பும் நாம், வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தைவிட்டும் தமிழர்கள் புலம்பெயர்ந்து போய்விடுவார்கள் (போய்கொண்டிருக்கிறார்கள்) என்பதை ஏன் மறந்திருக்கிறாரார்கள்?

ரசனை மாற்றம் ஒரு சின்ன ஆரம்பம்
சைன்ஸ் பிக்‌ஷன் படமாக வந்த நமது எந்திரன் படம் ஸ்டார்வார்ஸ் படத்தை போல யாரையேனும் இன்ஸ்பயெர் (Inspire) பண்ணுமா? கதைக்கு தேவையே இல்லாத பாடல் காட்சிகள் பார்ப்பவர்களை மட்டும் அல்ல இயக்குனரின் கவனத்தை கூட திசைதிருப்பி விட்டதே.. காமெடி எனற பெயரில் ஹீரோவுடன் இருக்கும் அசிஸ்டெண்ட் சயிண்டிஸ்ட்கள் (அவர்களும் சயிண்டிஸ்டுகள் தானே? இல்லை ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் கெளவரமான சயிண்டிஸ்டாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதா என்ன?)
கேலிக்குரியவர்களாக சித்தரிப்பது மாதிரி ஆங்கில படங்களில் வருகிறதா?

இந்த தவறுகளுக்கு சங்கர் காரணம் அல்ல. த்மிழ் ரசிகர்களே காரணம். காமெடி ட்ரேக், பாடல்-டான்ஸ் ட்ரேக் என்று கதைக்கு வேண்டாதவற்றை எதிர்பார்ப்பதால் வரும் விபரீதம். ஹிந்தியில் இன்று கதைசார்ந்த யதார்த்த சினிமாக்கள் வழக்கமான மசாலாக்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. ஆனால் தமிழில்? இந்த காமெடி-பாடல் பிட் இல்லாவிட்டால் ஒரு படம் கமெர்சியல் படம் அல்ல என்று நினைக்கும் ரசிகர் மனோபாவம் மாறினாலே நல்ல கதையுள்ள படங்கள் வருவதற்கு வழி வகுக்கும்.

சோசியல் மீடியாவின் சக்திமீடியாவின் சக்தியை நன்கு உணர்ந்தவர்கள் திமுகாவினர். திமுகவினர் (அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்) சினிமா சார்ந்தவர்கள். அரசியலில் வென்றால் தான் மீடியாவில் ஜெயிக்கமுடியும் என்பதை உணர்ந்து, சினிமா-அரசியல் காம்பினேஷனை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். அரசியலில் வென்ற பின்னர், மீடியாவை கையில் வைத்து கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள்   அரசிய்ல் சாராத பேண்ட்டசி சினிமாவையே மக்கள் பர்ர்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் அடுத்த நிலை கனவுகள்/கதைகள் என்பது இப்போது அவர்களுக்கு அலர்ஜியே. இவர்களை மீறி எப்படி மீடியா புரட்சி? வரும். முதலில் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளுங்கள். மீடியா புரட்சி தானாக நடந்துவிடும்.டுனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் கூட இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் அரசியல் புரட்சியே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் திரைப்பட ரசனையை கூட மாற்ற முடியாதா என்ன?


Thursday, February 17, 2011

ஆடுகளம் தள்ளுபடி விலையில்
ஆகா.. சிட்டில இப்படி தள்ளுபடி கொடுத்தா எப்பூடி இருக்கும்..;

பழனியில் பார்த்த இன்னொரு விளம்பரம்
 

Wednesday, February 16, 2011

கெளதம் மேனனின் சவால் – சபாஷ் சரியான போட்டி

கெளதமின் பார்முலா

போலீஸ் ஆக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் A சென்டர்களிலும், பெண்களிடமும் பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் B & C சென்டர்களில் போலீஸ் ஆக்‌ஷனுக்கு எப்போதும் மினிமம் கேரண்டி இருக்கும். இந்த இரண்டு முரண்பாடான ஆடியன்ஸையும் ஒரே படத்தில் திருப்திபடுத்துவது ஒரு பெரும் சாதனை. இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுள் கெளதம் மேனனும் ஒருவர்.
இதற்கு முக்கிய காரணம் ஆக்‌ஷனுடன் அழகான காதல் கதையையும் இணைத்து கதையை சொன்னவிதமே. காக்க காக்க படத்தின் காதல் ட்ரேக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் காதல் ட்ரேக்கும் தனியாக படம் செய்தாலும் ஜெயிக்கும் அளவு தரமாக இருந்தது. ஆக்‌ஷன் கதை சொல்பவர்களால் காதல் கதை சொல்லவது கடினம். காதல் கதை சொல்பவர்களுக்கு ஆக்‌ஷன் கதை சொல்வது கடினம். இரண்டும் சேர்ந்தால் எல்லா சென்ட்டர்களிலும் வெற்றி நிச்சயம். இந்த வெற்றியை பலமுறை பெற்றுள்ளார் கெளதம்.
 
வாரணம் ஆயிரம் சரியாக வராதததிற்கு யார் காரணம் எனற பிரச்சனையில் கெளதம் சூரியாவிற்கும் டேர்மஸ் சரியில்லாமல் போய்விட்டது. வாரணம் ஆயிரம் சரியாக வராததிற்கு உண்மையில் யார் காரணம்?

கெளதமின் பதில் சூர்யா காக்க காக்க போன்ற படத்திலும் நடிக்கிறார். சிங்கம் போன்ற படத்திலும் நடிக்கிறார். இந்த முரண்பாடுகளால் எனது படம் பாதிப்புக்குளாகிறது. கேஸ்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது. இந்த கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது, இரண்டும் போலீஸ் கதைகளே. ஆனால் ஒன்று A-B-C என்று அனைத்து சென்ட்ர்களுக்கும் பொருந்தும் படம். மற்றது B-C சென்டர்களுக்கென்றே எடுக்கப்பட்ட (அதி)ஹிரோயிஸம் படம்.. சூர்யாவின் இந்த ஸ்டார் இமேஜ் படத்தின் திரைக்கதை, காஸ்ட்டியூம் என்று பல டிபார்மண்ட்களில் நுழைந்துவிடுகிறது. இந்த ஸ்டார் இமேஜ்ஜிற்காக செய்யப்பட்ட காம்ரோமைஸ் படத்தை பப்படம் ஆக்கிவிடுக்கிறது. ஆனால் படம் தோற்றால் முழு பழி டைரக்டரின் மேல்தான் விழுகிறது.

முதல் சவால்வாரணம் ஆயிரம் படம் சரியாக வராததிற்கு காஸ்டிங் (Casting) மிஸ்ட்டேக் தான் காரணமே அன்றி தான் இல்லை என்று சவால விட்டு, அதை நிருபிக்கவென்றே எடுத்தது போலிருந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. பலத்த மலையாள வாடையுடனும் ஒரு காதல் கதையை தமிழில் வெற்றிபெற செய்யமுடியும் என்று தைரியமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நிருபித்த கெளதம் சூர்யாவுடனான சவாலில் ஜெயித்தார்.. சிம்புவிற்கு பொருந்திய கதை ஸ்டைல் வாரணம் ஆயிரத்தில் சூர்யாவிற்கு பொருந்தவில்லை. ஆக வாரணம் ஆயிரம் தோல்விக்கு காரணம் கெளதம் இல்லை என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

கேஸ்ட்டிங் என்பது மேலைநாடுகளில் மிக முக்கியமான டிபார்ட்மெண்ட். ஒரு படத்தின் வெற்றி தோல்வியைகூட பல சமயங்களில் கேஸ்ட்டிங் நிர்ணயிக்கிறது. மற்ற டைரக்டர்கள இதுவரை உணராதது தான் அவர்களது மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக போன தலைமுறை டைரக்டர்கள் பலர் தவறான கேஸ்ட்டிங்கினால் தங்களது மார்க்கெட்டை இழந்துள்ளார்கள் என்பதால் இந்த தலைமுறை டைரக்டர்கள் கெளதம் மேனனை முன்மாதிரியாக கொண்டு விழித்துக்கொள்வார்கள் என்று நம்புவோம்

இரண்டாவது சவால் :


மின்னலே முதல் விண்ணைத் தாண்டி வருவாயா வரை அனைத்து படங்களும் இசையினால் தான் ஹிட்டானது என்பது இப்போது பலரின் (ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட) வாதம். இல்லை என்று நிருபிக்க சவால் விட்டு வேலை செய்வது போல் வருகிறது நடுநசி நாயகள். நடுநசி நாய்கள் படம் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.
  
இந்த முறையும் ஜெயிப்பாரா கெளதம் மேனன்?
பிகு : கெளதம் மேனனின் படங்களின் பெயர்கள் மிகவும் இலக்கிய நயத்துடன் இருப்பதால் கமுகாவினர்கள் அவருக்கு பெரும் ஆதரவை கொடுத்துவருகிறார்கள். சிவப்பு ரோஜாக்கள் போன்ற கதைகள் எப்படியும் ஆண்டுக்கு ஒன்றாவது வந்துவிடும். பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் சுந்தர ராமசாமியின் கவிதை தொகுப்பின் தலைப்பை நடுநசி நாய்கள் என்று வைத்திருப்பதால் படம் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.Monday, February 14, 2011

தமிழ் மசாலா படங்களின் திரைக்கதை ரெசிபி
ஹாலிவுட் படங்கள், ஐரோப்பா படங்கள், இரான், கொரிய என்று எல்லா உலக படங்களும் ஜான்ரே (Genre) என்ற கதை இலக்கணத்தில் கட்டுப்பட்டே இருக்கும். ஹாரர், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பல ஜான்ரேக்கள் உள்ளன. ஒவ்வொரு ஜான்ரேவிற்கும் ஒரு உணர்ச்சியே (ரசம்) ஆதாரமாக இருக்கும். உதாரணமாக ஹாரர் என்றால் பயம், ரொமான்ஸ் என்றால் காதல்/சிருங்காரம் இத்தியாதி-இத்தியாதி. இந்த படங்கள் சிக்கன் பர்கரை போல ஒரே சுவை தான். சில படங்கள் அதிசயமாக இரண்டு ஜான்ரிகளை சேர்த்த கலவையாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் பைரேட்ஸ் ஆப் கரீபியன் (Pirates of Carribean). இந்த படத்தில ஹிஸ்டாரிகல-பைரேட்ஸ் ஜான்ரேயுடன் ஹாரர்-கோஸ்ட் ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி கலக்கியிருப்பார்கள். இதற்கு க்ராஸ் ஜான்ரே (Cross-Genre) அல்லது கோரல் (Choral) படங்கள் என்று பெயர். இது ஸ்பெசல் டாப்பிங்கோடு கூடிய பீட்ஸாவைப்போல.இரண்டு ஜான்ரேயை மிக்ஸ் பண்ணி க்ராஸ்-ஜான்ரே கதை எடுப்பது அங்கே பெரிய சாதனை. உதாரணமாக ஆயுத எழுத்து படத்தில வருவதுபோல பல கேரக்டர்கள் கோணத்தில் ஒரே சம்பவத்தை சொல்லும் திரைக்கதை யுக்தியை முதன்முதலில் உருவாக்கிய  (Alejandro González Iñárritu) இனாரித்து எடுத்துள்ள சமீபத்திய படம் பியூட்டிபுல் (Biutiful). பூயூட்டிபுல் படம் கேங்ஸ்டர்-கோஸ்ட் ஜான்ரி கலவை. இதையும் ஒரு திரைக்கதை சாகசம் என்று பலர் போற்றியுள்ளனர். இரண்டு ஜான்ரேக்கள் கலந்த திரைக்கதைக்கே இந்த கலாட்டா என்றால் நாலைந்து ஜான்ரேக்கள் கலந்து வரும் நம் தமிழ் மசாலா படங்களை நாம் கொண்டாட வேண்டாமா?நமது சராசரி படங்களுக்கு ஜான்ரே என்கிற பாகுபாடே கிடையாது. ஒரே படத்தில் ஒரு சீன் காமெடியாகவும், அடுத்த சீன் ஆக்‌ஷனாகவும், அடுத்த சீன் ரொமான்ஸாகவும் மாறிமாறி தொடர்ந்துகொண்டிருக்கும். ஏன் இப்படி? நம்து டைரக்டர்களை கேட்டால் வரும் பதில் “பாஸ், அங்கெல்லாம் சாப்பாடு பர்கர், பீட்ஸா மாதிரி ஒன்னு-இரண்டு சவைதான். நம்க்கு அப்படியா? நாலஞ்சு வ்கையான கூட்டு, பொரியல், பருப்பு, சாம்பார், ரசம், மோர்-த்யிர், பாயாசம் என்று மல்டி-கோர்ஸ் மீல்ஸ் போல. அதனால தான் காமெடி,ஆக்‌ஷன்,ரொமான்ஸ் எல்லாம் ஒரே படத்தில வருது”.


அனாயசமாக நாலைந்து ஜான்ரிகளை கலந்து உருவாகும் நம்து மசாலா படங்களின் ரகசிய ரெசிபி என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 

Thursday, February 10, 2011

ராதாமோகனின் பயணம - இதுவரை


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் ராதாமோகன். ஆனால் அதிக ஆர்பாட்டம் இல்லாதது இவரது பலவீனம். என்னை பொருத்தவரையில் அதுவே அவர் பலமும் கூட.

அழகிய தீயே படம் இவரது முதல் படம் இன்னொரு மெளனராகம். இதன் கதைசொல்லும் திரைக்கதை பாணி அலாதியானது. ஒரு ஹோட்டலில் இருவரின் உரையாலில் ஆரம்பிக்கும் கதை, பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துசேர, புதிதாக வரும் ஒவ்வொரு நபரும, கதையை அதுவரை நடந்த உரையாடலில் இருந்து தொடர்வார். இதை ஒரு சர்வர் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பார். அந்த சர்வர் உடன் பார்வையாளரும் ஒன்றி கதை வளர்வதை கவனிப்பது போன்று அமைந்திருக்கும் திரைக்கதை. அழகிய தீயே படத்தில் விழிகளின் அருகினில் வானம் ஒரு மிகப்பெரிய ஹிட் பாடல்.
அழகிய தீயே - ராதாமோகனுக்கு ஒரு அழகிய ஆரம்பம் ஆனது.

மொழி ஒலியோடு வாழ்க்கை நடத்தும் இசைக்கலைஞன் ஹீரோ. ஒலியே அறியாத மாற்றுத்திறனாளி ஹீரோயின். இலக்கணம் பிரலாத காதல் கதை. நான் அறிந்த பல தமிழ் குடும்பங்கள் குழந்தைகளோடு இரண்டு-மூன்று முறை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில், இந்த சிறப்பு எத்தனை பெரிய சாதனை என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். மொழியின் பலம் அதன் பாடல்கள்.

ராதாமோகனின் சாதனை படம் என்பது என்னை பொருத்தவரை அபியும் நானும். கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மசாலா தமிழ் படங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு இருக்கின்றன. ஆனால் கதையோ பிளாட்டோ (Plot) இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படவரிசையில் அபியும் நானும் தான் முதல்.அபியும் நானும்ஒரு தகப்பனின் கேரக்டர் ஸ்டடி (Character Study) மட்டுமே. திரைக்கதை முதலில் “Meet the Parents” (மாமனாருக்கும் வருங்கால மருமகனுக்கும் நடக்கும் மோதல்) கொஞ்ச நேரம், அறியாத வயதில் செய்த தவறை உணர்ந்து வருந்தும் கேரக்டர் (கேளடி கண்மணி ஹீரோயின் போல்) கதை கொஞ்ச நேரம், (Father of the Bridge) மகளின் கல்யாணம் நடக்கையில் அப்பாவிற்கு நிகழும் நெருக்கடி (Coming of Old-Age Crisis) கொஞ்ச நேரம் என்று அங்கும்-இங்கும் அலைகிறது (திரைக்கதை). நேர்த்தியில்லாத ஒரு இயக்குனரிடம் மாட்டியிருந்தால கதை கிச்சடி அகியிருக்கும். ஆனால் ராதாமோகனின் கையில் இது ஆன்டன் செக்காவ் (Anton Chekov) ஸ்டைல் கேரக்டர் ஸ்டடி நாடகமாக மலர்ந்திருக்கிறது.

செக்காவ் புரட்சி செய்வதாக நினைத்து பிளாட்டே (Plot) இல்லாமல் நாடகம் போட்டப்போது தேர்ந்த ரசிகர்கள் நிறைந்த ரஷ்யாவிலேயே நாடகம் புரியாததால் அரங்கத்தில் கலாட்டா நடந்ததாக கேள்வி. அத்தகைய ஒரு கதைஅமைப்பை தமிழில் செய்ய இமாலய ரிஸ்க் எடுத்த ராதாமோகனின் தைரியத்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் வைக்க வேண்டும்.

அபியும் நானும் படத்திலும் பாடல்கள் ஒரளவு ஹிட்டே. இதுவரை இசையை ஒரு மிகப் முக்கியமான அங்கமாக கொண்டு படம் எடுத்த ராதாமோகனின் அடுத்த படத்தில் பாடல்களே இல்லை. ராதாமோகனுக்கு உண்மையிலேயே ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலும்!! அரைத்த மாவையே அரைத்துவிட்டு, சொல்லிய கதையையே திரும்ப்-திரும்ப சொலுவதோடு நில்லாமல், “அவனை நிறுத்தச்சொல். நான் நிறுத்தறேன்என்று நாயகன் கணக்கில் டைலாக் அடிக்கும் அதி-ஹீரோயிஸம் துதிக்கும் பெரும்பான்மை டைரக்டர்களிடமிருந்து விலகி தனித்து தெரிகிறார் ராதாமோகன்.

-         இங்ஙனம்,
   ராதாமோகனின் “பயணம்வெற்றிபெற வாழ்த்தும்,
   கொள்கை பரப்பு செயலாளர் , கதை முன்னேற்ற கழகம்

Tuesday, February 8, 2011

நீதிபதிகள் காலத்தின் மகா கதைசொல்லிகள் : தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸ்


ஹிந்துவில் பிப்ரவரி 5, 2011 வந்த ஒரு தென்-ஆப்பிரிக்காவின் நீதிபதி ஆல்பர்ட் லூயிஸ் சாக்ஸிடன் ஒரு உரையாடலில் இருந்து:The Indian Supreme Court has been taking expansive steps to monitor and curb corruption in what is being referred to as a “season of scams.” With its exemplary powers, just like the Constitutional Court of South Africa, how do you see the court's role as a moral compass for our times?
I would say that the Supreme Court of India, as in any other country, should do much more than just resolving disputes between people. Courts play an enormously significant role in representing the aspirations of a nation, telling us what it means to be an Indian in India and a South African in South Africa. It should not be through grand three-piece statements, but through an incremental way of defining how power should be exercised, what rights of citizens are and what the relationship between the government and its people should be. Judges should be great storytellers of their age, and the way you tell it through a judgment is just as important as what you decide.

அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள், ஊடகங்கள் ஆகிய மூன்று தூண்களும் சீர்குலைந்து விட்ட இந்த காலகட்டத்தில் நீதித்துறை ஒன்றுதான் இன்று நமது சமூகத்தின் ஒரே நம்பிக்கை. பாக்கிஸ்தானில் கூட நீதித்திறையினர்தான் முசாரப்பை துரத்தியட்டித்தார்கள். ந்ம் நம்பிக்கையை காப்பாற்றுமா நீதித்துறை?

Monday, February 7, 2011

ஆடுகளம் : குருவே சனியானால்?அழகான இலக்கியத்தமிழில் சேவல்சண்டையின் பாரம்பரியத்தின் அறிமுகத்துடன் கொண்ட்டாடமாக ஆரம்பிக்கிறது. படத்தின் கடைசிகாட்சி வரை அந்த நேர்த்தியை தக்கவைத்துகொள்வதே ஆடுகளத்தின் சிறப்பு.

சோதிடத்தில் ஒருவர் வளர்ச்சிக்கான அதிபதி குரு. அதேபோல் ஒருவரின் எல்லைகளின் அதிபதி சனி. காற்று ஊத ஊத பெரிதாகும் பலூன், தனது எல்லையை மீறும்பொழுது வெடித்துவிடுகிறது. இதுவே குருவிற்கும் சனிக்கும் உள்ள பந்தம். நமது வளர்ச்சியின் அங்கமாக, நமக்கு குருவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நமது எல்லைகளை வரைய்ருக்கும் சனியாகவும் இருப்பதே யதார்த்த வாழ்வின் “Irony” களுள் ஒன்று. இதை மையக்கருவாக கொண்டதுதான் ஆடுகளம்.

சிபி ம்லயில் இயக்கத்தில், நெடுமுடி வேணுவும் மோகன்லாலும் நடித்த பரதம் படத்தின் கருவும் இதே கருவையே கொண்டுள்ளது. அதில் போட்டிக்கான களம் ச்ங்கீதம். இதில் குரு நெடுமுடி வேணு சிஷ்யன் மோகன்லாலுக்கு அண்ணனாகவும் இருக்கிறார். குடித்துவிட்டு கச்சேரிக்கு பாடவரும் வேணு ஒரு முறை பாடமுடியாமல் போக அவருக்கு பதிலாக பாடுகிறார் மோகன்லால். அதன் பிறகு மோகன்லாலின் புகழ் ஓங்க, வேணுவிற்கு வாய்ப்புகள் குறைய துவங்குகிறது. வேணு மோகன்லால் மீது கோபம் கொள்கிறார். இதன் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது.

பரதம்தமிழில் சீனுவாக பி.வாசுவும் கார்த்திக்கும் நடித்தார்கள்.
அமரஸ் பெரோஸின் நாய்ச்சண்டையை சேவல் சண்டையாக்கி, பரதத்தின் சங்கீதமேடையில் உட்காரவைத்தால் ஆடுகளம்.
வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ்..


ஆடுகளத்தின் காதல் டிரேக் தான் படத்தின் மிகவும் இண்ட்ரஸ்டிங்கான டிரேக். ஆதாரகதையுடன் பின்னிபிணைந்தே வருகிறது. முதலில் பாத்திரப்படைப்புக்கள். சேவல் கலாச்சாரத்தில் திளைத்து வள்ரும் மண்ணின் மைந்தன் ஹீரோ. இதற்கு நேர் எதிர்பதம் ஹீரோயின் பிறந்த மண்ணோடு ஒட்டவும் முடியாமல வெட்டவும் முடியாமல் அந்நியப்பட்டு வாழும் ஆங்கிலோ-இந்திய பெண். முதல் சந்திப்பும் சேவல்சண்டையே காரணம். குருவின் பேச்சை கேட்காமல் எதிரியாகப் போவதற்கும் காதலே காரணம். இறுதியில் குருவின் சுயரூபம் தெரிவதற்கும் காதல் ஒரு பங்களிக்கிறது.

தோல்வியின் பக்கவிளைவுகளால் வீழ்ச்சியின் சுழலில் சிக்கும் குருவின் பாத்திரப்ப்டைப்பு மிக அழகாக உள்ளது. குறிப்பாக ஹீரோ குருவிடம் சொல்லும் கடைசி டைலாக் “நான் உன்னை என் அப்பா மாதிரி நினைத்திருந்தேனே.. ஹீரோ இவ்வாறு சொன்னதும் உடைந்துபோய் தற்கொலை செய்துக்கொள்வது படத்தின் மற்றும் ஒரு ஹை-லைட்.

வெறும் ஆயிரம் ரூபாய்க்காக தனது மானத்தை அடமானம் வைப்பது ஹீரோவிற்கு விவேகமா? இந்த குற்றம் குருவின் பலிவாங்குதலை நியாயப்படுத்திவிடுகிறதே?

ஆடுகளம் வெற்றிமாறனின் வெற்றிக்களம்

பி.கு : ஸ்டார் மூவீஸில் இன்று பார்த்த ஒரு குரு-சிஷ்யன் மோதல் ஆங்கில படம் 21
 

Sunday, February 6, 2011

யுத்தம் செய்: கேள்வியும் நானே பதிலும் நானேதமிழில் சினிமா என்றால் திரைக்கதையின் நடுநடுவே பாட்டு,காமெடி பிட் என்று தடங்கல் வரும். பல படங்களில் பாட்டு, டான்ஸ், காமெடி பிட்டுகளுக்கு நடுநடுவே தான் தடங்கலாக திரைக்கதை என்ற பெயரில் டாக்கி போர்ஷன் வ்ரும். நம்து சினிமா ஒரு “Cinema of Interruptions” என்று அயல்நாட்டினர் அழைக்கின்றனர். இந்த தடங்கல் மரபு காதல், மைனா போன்ற புதிய தலைமுறை படங்களில் கூட இருக்கிறது. (ஒரு விதிவிலக்கு உன்னைப்போல ஒருவன்).  இந்த மரபை மீரும் தைரியத்திற்கு மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய சபாஷ் போடலாம்.

ஒரு எழுத்தாளர் நேர்த்தி அவர் எதைச்சொல்கிறார் என்பதில் இருக்கும் அளவு, எவைகளைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார் என்பதிலும் இருக்கிறது. இநத நேர்த்தி மிஷ்கினிடம் இருப்பது யுத்தம் செய் படத்தில் தெரிகிறது

உதாரணம் : ஒப்பனிங் சீன். ஒரு குற்றம் நடப்பதை பார்த்துவிடுகிறார் ஒர் பெண். போலீஸுக்கு போன் பண்ணுகிறார். குற்றவாளிகள் இதை கவனித்துவிடுகிறார்கள். இந்த சீன் வேறு படமாயிருந்தால் அடுத்து வந்திருக்கும் சீன் : உடனே ஒரு சேசிங். சீன். இதில் அநத பெண் ப்ரேம்மை (frame) விட்டு வெளியே போகிறார். குற்றவாளிகளும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவ்வளவு தான். படம் முழுக்க இதுபோல காலகாலமாக வரும் கிளிச்சே (Cliché) சீன்களை கட் பண்ணிவிடுகிறார் மிஷ்கின்.

போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்றால் அது விஜயகாந்த ஸ்டைலில் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் அங்குமிங்கும் விசுக்விசுக்கென்று அலைவார். பிறகு ப்ரில்லியன்ஸி என்ற பெயரில் யாருமே எதிர்பார்க்காத சாகசம் செய்து கண்டுபிடிப்பார்.
ஆனால் இதில் ஒரு சாட்சி சொல்லும் ஒரே ஒரு சின்ன செய்தியை நூல்பிடித்து சென்று யதார்த்தமாக குற்றப்பின்னணியின் ஒவ்வொரு முடிச்சுக்கலாக அவிழ்கிறார் சிபி-சிஐடி சேரன். இதுபோல் இன்வெஸ்டிகேஷன் ப்ரோசீஜியரை மையமாக வைத்து எடுக்கப்படும் Police Procedural Genre படம் (மலையாளத்தில் சிபிஐ டைரிக்குறிப்பு) தமிழில் இதற்கு முன்னர் வந்ததாக நினைவில்லை.

போலீஸ் ப்ரோசீஜர் படம் என்பதால் மெலொட்ராமா (Melodrama ) சீன்களை தவிர்த்துவிடுகிறார் மிஷ்கின். உதாரணமாக சேரனின் தங்கை காணாமல் போய்விடுகிறார். ஆனால் த்ங்கையை போலீஸால் கண்டுபிடிக்கமுடியவில்லை. சேரனே இந்த கேஸை எடுத்துக்கொள்ளவும் அனுமதிப்பதில்லை..ரத்தினவேல் பாண்டியனாகமாறி ப்ஞ்ச்டைலாக் பேசி கேஸ் நடத்தும் எஸ்.ஐ யுடன் மோதி தூள்பறக்க இண்ட்ரோ ஆகாமல், சேரன் கோபத்தில் ரெஸிக்னெஸன் கொடுப்பதுடன் யதார்த்தமாக அறிமுகமாகிறார். மிஷ்கினுக்கு இந்த ஹீரோ அறிமுகம் ஒரு சின்ன சீன் தான். ஆனால் தமிழ்திரைக்கு ஒரு பெரிய தாவல்.


தத்துவார்த்தமான சிந்தனையை கதையில் இன்னொரு தளமாக கொண்டுவர மிஷ்கின் முயல்கிறார். ஹீரோவிற்கு ஜெ.கே என்று பெயர். போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் கேரக்டர் வாயிலாக சில தத்துவ-டைலாக்குகள். க்ளைமேக்ஸில் ஹீரோ வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கூறும் ஆறுதல். வ்வூயரிஸத்திற்கு (voyeurism) Eguus பாணியில் கண்களை குருடாக்கும் தண்டனை. இவைகள் மூலம் எக்ஸிட்டென்ஸியல் ப்ராப்ளம் (Existential Problem) போன்ற மனச்சிக்கல்கள் தமிழர்களுக்கும் உண்டு என்ற ஒரு சின்னகோடு அளவே இருந்தாலும் இந்த தளம்/பரிமாணமும் ஒரு நல்ல முயற்சி.

படத்தின் மிகப் பெரிய குறை : சராசரி ரசிகனும் முதலிலேயே யூகிக்க முடிவதால் இரண்டாம் பகுதி சருக்குகிறது. வில்லன் கோஷ்டியில் ஒரு முக்கிய அங்கத்தினரான ஏசி, தனது தரப்பு ஆட்கள் ஒவ்வோருவராக கொல்லப்படும்போது சும்மா உட்கார்ந்து புலம்புவதை விட்டுவிட்டு, ஹீரோவிற்கு போட்டிபோட்டுக்கொண்டு புலன்விசாரணை செய்திருந்தால், ரசிகர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு,  படம் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்குமோ?

தமிழ் படத்தின் இன்னொரு மரபு ஆடியன்ஸ் கேரக்டர். படத்தில் ஒரு கேரக்டர் கதை சம்பவங்களின் காரணத்தை அடிப்படை ஆடியன்ஸுக்கு தெள்ளத்தெளிவாக புரியுமாறு விளக்கமாக சொல்லிவிடுவார். ஆனால் தேர்ந்த ஆடியன்ஸுக்கு இதைவிட பெரிய கடுப்படித்தல இருக்கமுடியாது. அதனால் இநத ஆடியன்ஸ் கேரக்டரையே கட் பண்ணிவிட்டார் டைரக்டர்.

நடிகர்கள் எல்லோரும் பாஷாங்கில்லாமல் யதார்த்தமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். இறுதியில் ஹீரோவின் தங்கையை தங்கள் மகளாக பார்க்கும் புருஷோத்தமன் குடும்பத்தின் செண்டிமெண்ட் நன்று.

படம் ஒரு நல்ல முயற்சி.


பிகு: இந்த ஆடியன்ஸ் கேரக்டர் இல்லாததால் நிறைய கேள்விகள். அதில் சில:

(படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு)

1. படத்தில் வரும் முதல் சீன் (ஆட்டோ சீன்னிற்கும்) செப்டம்பரிலும் அடுத்த சீனிற்கும் ஜனவரியிலும் நடக்கிறது. இதை ச்ப்டைட்டில் போட்டு கால இடைவெளியை காட்ட்யிருக்க வேண்டாமா?

இந்த மரபையும் பிரேக் செய்கிறோம். நீங்களே புரிந்துகொள்ளவேண்டும்.


2. புருஷோத்தமன் குடும்பம் உயிரோடு தான் இருக்கிறது, அதோடு ஜூடாஸிற்கும் இதில் தொடர்பிருக்கிறது என்பதை ஜெ.கே எப்படி யூகிக்கிறார்?

விண்டோ ஏசி மெஷினின் பாதுகாப்பு கம்பிகள் கழன்று இருக்கிறது. அதனால் அவர்கள் த்ப்பியிருக்க வேண்டும். அவர்கள் இறந்ததாக நிருபணம் ஆகியிருப்பதற்கு ஜூடாஸின் உதவி இல்லாமல் முடிந்திருக்காது. ஆகவே அவரும் இதற்கு உடந்தை தான்.


4. புருஷோத்தமன் வீட்டிற்கு ஏன் எப்போதும் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டே செல்கிறார்கள்? பகலில் வெளிச்சத்தில் போனால் என்ன?

இருட்டில் போனால்தானே த்ரில்லா இருக்கும். இது என்ன கேள்வி?

5. வில்லன் ஏசி இறந்தபின் செல் அடிக்கிறது. அதில் “Daddy” என்று வருகிறது. ஆனால் அது அவரது மகள் தான் கூப்பிடுகிறார் என்று அனுமானிக்கமுடிகிறது. ஆனால் மகளின் நம்பரை “Daddy” என்றா அப்பாக்கள் பதிவு செய்வார்கள்?

ஏன் வைக்கக்கூடாதா என்ன? மகள் அவரை டாடி என்று அழைப்பதை சிம்பாலிக்காக குறிப்பதற்கு வைத்திருக்கிறார்.
( மிஷ்கின் யாரோ ஒரு அஸிஸ்டெண்ட்டை திட்டும் சத்தம் கேட்கிறது ).


ஆனால் பதில் தெரியாத சில கேள்விகள்.

1. ஹீரோ ஒரு சிறுவனின் உடலைத் தேடி மார்ச்சுவரிக்கு போகிறார். அங்கே அந்த உடல் இல்லை. ஏற்கனவே மகனது உடலுக்கு பதிலாக வேறு ஒரு உடல் மாற்றிவைக்கப்ப்ட்டு விட்டதே. பிறகு இது எதனால்?

2. புருஷோத்தமன் ஒருவரை மட்டுமே கொல்கிறார். தலைதுண்டிக்கப்பட்ட உடல் ட்ரம்மில் உள்ள ஹீரோ ஏற்கனவே பார்த்துவிடுகிறார். அப்போது கரப்ட் இன்ஸ்பெக்டர் எதை பார்த்து பயப்படுகிறார்?


3. இன்னும் நிறைய வில்லன்கள் பாக்கியிருந்தாலும், ஏன் புருஷோத்தமனும் அவரது மனைவியும் துப்பாக்கியுடன் உள்ள வில்லன் கோஷ்டியுடன் தற்கொலைக்கு சமமாக வெறும் கத்தியுடன் வெற்றுவெளியில் நேருக்குநேர் மோத ஓடிவருகிறார்கள்?


Saturday, February 5, 2011

விஜய் கமுகாவுடன் (ராமதாஸ் பாணி) கூட்டணி அறிவிப்புகாவலன் ரிலீஸிற்கு பின் விஜய் விடும் எல்லா அறிக்கைகளிலும் தவறாமல் வரும் செய்தி இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். என்பதே. அதாவது அதிஹீரோயிஸம் கொள்கையை விட்டுவிட்டு கதை முன்னேற்றக் கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்ள விரும்புகிறாராம்.

இந்த வார ஆனந்தவிகடன், குமுதம் இரண்டிலும் அட்டைப்பட ஹைலைட் விஜய். காவலினில் ஆக்‌ஷன்ஹீரோவாகயில்லாமல் காமெடிப்பீஸாகி விட்டது அவருக்கு பெரும் வருத்தம் போலும். அந்த ஆதங்கத்தில் நல்ல கதையில் இரண்டுமூன்று முக்கிய பாத்திரங்கள் இருந்தாலும் பரவாயில்லை, நடிப்பேன் என்று ஆனந்தவிகடனில் கூறுகிறார். ஆனாலும் அவர் மனமெல்லாம் அதிஹீரோயிஸம் கொள்கையில் தான். இனிமேல் வருடம் ஒரு கதை படம் பிறகு ஒரு அதிஹிரோயிஸம் படம் என்று இரண்டு பக்கங்களிலும் கால் வைத்துக்கொள்ள போகிறாராம். இது பமகா ராமதாஸின் இராஜதந்திரத்தைப்போல் - திமுக-அதிமுக என்று இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி என்று சொல்லிக்கொண்டு கடைசி நேரத்தில் எந்த கட்சி ஜெயிக்கும் என்று தோன்றுகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி என்ப்து போலத்தான். ஆனால் விஜய் இன்றைய அரசியல் ராமதாஸின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிட்டார் என்று தெரியவில்லை.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் என்று விஜய் சொல்வதன் உள்-அர்த்தம் என்ன? நான் இப்போது கொஞ்சம் வீக்காக இருக்கிறேன். முன்னர் எனக்கு எனர்ஜி கொடுத்து நடசத்திரநடிகனாக்கியது போல்,  நல்ல கதைகள் மூலம் மீண்டும் எனக்கு எனர்ஜி கொடுங்கள். நான் மீண்டும் அதிஹீரோவாகி உங்கள் படங்களுக்கே ஆப்புவைக்கிறேன் டைரக்டர்களே என்பதே.

நல்லாத்தான் போய்கிட்டு இருக்குது, விஜய்.

விஜய்க்கு கமுக கொ.ப.செ (கொள்கைபரப்பு செயலாளர்) சொல்வதென்ன?

1. காலம் மாறிவிட்டது: விஜய், ரஜினியின் காலத்தைப் போல இப்போதைய காலம் இல்லை. விடலைகள் இன்று கிராமங்களில் கூட பெரும்பாலும் மெட்ரிக்கில் படிக்கிறார்கள். ஹிந்தி, ஆங்கில சேனல்களைப் பார்க்கிறார்கள். இன்ட்டர்நெட்டில் ஈசனைப்போல எல்லாம் படிக்கிறார்கள். சமுகசூழல் மிகவும் மாறிவிட்டது. அதனால் கதைகளும் மாறிக்கொண்டிருக்கிறது. ரஜினியே சாப்ட்வேர் இன்ஜினியாரகவும், சயிண்டிஸ்டாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் நடிக்கும் சுறா கதாபாத்திரத்தையும் ரஜினியின் சமீபகால கதாபாத்திரங்களையும் நீங்களே ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.

2. சமீப காலமாக உங்கள் படங்கள் ஓடாததிற்கு உங்களை த்விர உலகில் மற்ற எல்லோரையும் குற்றம்சொல்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் க்தையே இல்லாமல் உங்கள் சகாக்கள் விக்ரம், அஜித், சிம்பு ஆகியோர் நடித்த அதிஹீரோயிஸம் படங்களும் கூடத்தான் ஓடவில்லை. அவர்கள் யாரை குறைசொல்கிறார்கள். காலத்தின் மாற்றத்தை நன்றாக உணர்ந்த நட்சத்திரம் சிம்பு. அவர் தான் நீங்கள் மீண்டு எழுவதற்கான முன்னுதாரணம்.


3. சேட்டிலைட் சேனலகள் வந்தபின், திரைப்பட உலகில் தயாரிப்பாளர்கள்/விநியோகிஸ்தர்கள் கையே ஓங்கியுள்ளது. இது தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் இப்படித்தான் உள்ளது. இன்றைய வியாபார உலகில் நடிகர்களும் தங்களை ப்ரோமோட் பண்ணிக்கொள்ள டீவியில் வந்தே ஆகவேண்டும். விக்ரம், சூரியா போல நீங்களும் விளம்பரங்களில் நட்ப்பது ஏன்? சந்தடிசாக்கில் உங்களையும் ப்ரோமோட் பண்ணிக்கொள்ளத்தானே.. சினிமாவிற்குள் டீவி வராது. ஆனால் டீவிக்குள் சினிமா வந்து விடுகிறது. சினிமாவைவிட டீவியும் இன்ட்டர்னெட்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். SMS மூலமே உங்களை கதறகதற் குதறுபவர்கள் எல்லோரும் சன் டீவியின் வாரிசுகளில்லை. ஈசனின் வாரிசுகள் அவர்கள்.

4. கதைகளையும்  வசனங்களையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி வளைத்து ப்ராக்‌ஷி எழுத்தாளர், ப்ராக்‌ஷி டைரக்டராக வந்தது போதாமல், காவலன் மூலம் ப்ராக்‌ஷி விநியோகஸ்த்தராகவும் வலம் வர நினைப்பது எந்த அளவு ப்ராட்டிகல்?

5. உங்கள் நிஜ போட்டி இப்போது தனுஷ் என்பதை எத்தனை நாள் மறைக்க முடியும்? உங்கள் படம் வரும்போதெல்லாம் தன் படங்களை ரிலீஸ் செய்து, உங்கள் படங்களை ஒப்பிடும்போது என் படம் எவ்வளவோமேல் என்று சொல்லியே தனுஷ் தன் படத்தை வெகுகாலமாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் தனுஷை கவனியுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம்.


7. இந்த காலத்தில் அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்பதை
தண்ணிகுடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு திரையுலக தெயவம் சிரஞ்சீவியை கேட்டால் கதை கதையாக சொல்வார்.

உங்கள் ஈகோவை அடகுவைத்து விட்டுவிட்டு, கமுகாவுடன் நிரந்த கூட்டணி அமையுங்கள். ரசிகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்த நல்ல கதைசொல்லி டைரக்டர்கள் தான் உங்கள் நிஜ பலம் என்பதை உணருங்கள்.Friday, February 4, 2011

காரைக்குடியில் நேற்று நாடோடிகள் ரிலீஸ்


இன்று தினகரனில் முக்கிய செய்தி: 7 நண்பர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் நண்பனை காதலித்த, ஆனால் வேறு ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திசென்றுள்ளனர். இந்த முயற்சியில் 3 பேர்களை அரிவாளால் வெட்டியும் உள்ளனர். பெண்ணும் காதலனும் எங்கோ ஓடிவிட்டனர். நாடோடிகள் கதையை அழகாக அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் வெகுவிரைவில் டீவி சீரியல் ஒன்றில் ரீப்ளே ஆகும் என்று உறுதியாக நம்பலாம். கதைகளும் நிஜவாழ்க்கையும் எதிரும்புதிருமாக நிறுத்திவைக்கப்பட்டுள் இரண்டு கண்ணாடிகளைப்போல ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன என்பதே நிஜம்.


இன்றைய மிடில்கிளாஸ் இளைஞர்கள் பெரும்பாலும் பொல்லாதவன் தனுஷின் பாதிப்பில் மிதக்கிறார்கள். பல்சர் பைக், 6 மாதத்திற்கு ஒருமுறை மாறும் செல்போன், ஜீன்ஸ்-டீசர்ட் சகிதமாக ஊரை வலம் வருகிறார்கள். இவர்கள் காதலிக்கும் பெண்களுக்கு பெரும்பாலும் தங்கம் ரம்யாகிருஷ்ணன் தான் ரோல்மாடல். ஒரு நிமிடம் காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அடுத்த நிமிடம் குடும்பகெளரவத்திற்காக காதலையும் தியாகம் செய்வார்கள். குத்து ரம்யாவிற்கும் தங்கம் ரம்யாவிற்கும் நடக்கும் போராட்டத்தில் பல தலைகள் நித்தம் உருளுகின்றன தமிழ்நாட்டில்.Thursday, February 3, 2011

ஹீரோ, ஆண்டி-ஹீரோ மற்றும் அதி(Super)ஹீரோகதைகளில் ஹீரோவின் முக்கிய எதிரி வில்லன். வில்லனொடுதான் ஹீரோ தனது இறுதிபோரட்டத்தை நடத்துவான். ஆனால் ஹீரோவிற்கு போட்டியாளனாக கதையில் இன்னொரு கதாபாத்திரம்ஆண்டிஹீரோ (anti-hero) கதாபாத்திரம் வரும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் அர்ஜுணனோடு போட்டிப்போடும் கர்ணன் (ஹீரோவிற்கான சகல குணங்களையும் கொண்ட) ஆண்டி-ஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.

ஆண்டிஹீரோ என்று வில்லத்தனமாக ஹீரோவே நடிப்பதை (டர்/பாஸிகர் படத்தில் ஷாருக், ப்ரியமுடன் விஜய்) சொன்னாலும், கதை இலக்கணப்படி ஆண்டிஹீரோ அதுமட்டும் அல்ல. இந்த ஆண்டி-ஹீரோ கதாபாத்திரம் ஹீரோ விரும்பும் பெண்ணையே அவரும் விரும்புவார். அல்லது ஹீரோ அடைய நினைக்கும் பதவியை அடைய நினைப்பார். அல்லது, ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் (பாட்டி/தாத்தா, மாமா) செல்லப்பிள்ளை யார் என்பதில் ஹீரோவிற்கும் ஆண்டி-ஹீரோவிற்கும் போட்டி நடக்கும். பெரும்பாலான தமிழ்படங்களில் இந்த ஆண்டி-ஹீரோ பாத்திரத்தில் நகைச்சுவை நடிகர்களே நடிக்கிறார்கள். அதனால் யதார்தத்தில் தங்களை குறிக்கும் ஆண்டிஹீரோ பாத்திரங்களை ரசிகர்கள் பல சமயங்களில் உணரமாட்டார்கள்.

கதையில் ஹீரோவிற்கும் ஆண்டி ஹீரோவிற்கும் உள்ள போட்டிக்கு உள்ள முக்கியத்துவம், ஆரோக்கியம் அந்த கதையின் தன்மையை/அரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஏனெனில், ஒரு ஹீரோ பாத்திரத்தின் தன்மையை வில்லனைபோலவே,ஆண்டி-ஹீரோ பாத்திரத்துடன் ஒப்பிட்டே அனுமானிக்கப்படுகிறது. இது வில்லனின் உக்கிரத்தை வைத்து அவனை அடக்கபோகும் ஹீரோவின் பராக்கிரமத்தை சொல்வதுபோல.

தமிழ்திரை உலகில ஆண்டிஹீரோ பாத்திரப்படைப்புக்கள் எப்படி உள்ளன? அதிலும் குறிப்பாக எப்படி இந்த பாத்திரம் போன தலைமுறைகளிலிருந்து பரிணமத்து வருகிறது என்பதை பார்ப்போம்.

1. ஆண்டிஹீரோ-ஹெல்பர்ஸ் : எம்ஜிஆர்-சிவாஜி படங்களில் நாகேஷ் வரும் ஆண்டி ஹீரோ பாத்திரம் பெரும்பாலான சமயங்களில் ஹீரோவிற்கு உதவும் ஹெல்பர் பாத்திரத்தில் தான் வருகிறார். உருவத்தில் மிகவும் வீக்காக (ஆனால் திறமையுள்ள) இருக்கும் நாகேஷுடன் ஒப்பிடும்போது ஹீரோ சக்திவாய்ந்தவராக, ஆதிக்கம் உள்ளவராக தெளிவாக தெரிவார். இந்த பாத்திரம் கடைசியில் பெரும்பாலும் ஹீரோயினின் ஹெல்பர் பாத்திரத்தில் வருபவரை மணந்துகொள்வார். நாகேஷ் நடித்த மிக குறிப்பான ஆண்டிஹீரோ வேடம் தில்லான மோகனாம்பாள் வைத்தி. 

2. ஆண்டிஹீரோ : தனிக்காட்டு ராஜா


கவுண்டமணியின் காலத்தில ஹீரோவை நையாண்டி செய்யும் வ்லுவான பாத்திரத்தில் வந்தார்.ஆனால் இவர் கால்த்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லமல் காமெடி தனி டிரேக்காக வர ஆரம்பித்தது. ஆண்டிஹீரோ தனது டிரேக்கின் ஹீரோ போலவும், தனக்கென்று ஒரு ஹெல்பர் அல்லது ஆண்டிஹீரோவை (செந்தில்) கூட வைத்துக்கொண்டார். சத்தியராஜுடன் கவுண்டமணி நடித்த நடிகன் படம் வலுவான அண்டிஹீரோவிற்கு ஒரு நல்ல உதாரணம்.


ஹீரோவிற்கு நண்பன் ஆகவந்தாலும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் தனியாக கமெடி டிரேக்கில் வரும்போது
ஹீரோவின் ஆக்‌ஷனுக்கு மாற்றாக விவேகத்துடன் வலம்வந்தார் விவேக்

3. ஷோக்காட்டும் ஆண்டிஹீரோ:

துபாய் சென்றுதிரும்பி வந்து ஷோக்காட்டும் ஆண்டிஹீரோ வடிவேல் அவரது கொட்டத்தை அடக்கும் ஹீரோ பார்த்திபன் காம்பினேஷன் மிகப்பிரபலமான காமெடி டிரேக். இதேபோல் ஷோக்காட்டி குட்டுப்படும் ஆண்டிஹீரோவாக வடிவேல் வின்னர் போல பல படங்களில் தொடர்ந்து நடித்து வ்ருகிறார்.

4. கேலிக்கூத்தாடி ஆண்டிஹீரோஓவர் ஆக்‌ஷன் (Super)அதிஹீரோ

ஹீரோவின் பராக்கிரத்தை மிக உயர்த்தி காட்டவேண்டும் என்று வரும்போது இந்த  வியாதிக்கு முதல் பலி ஆண்டிஹீரோக்களே.
ஹீரோவை இமிட்டேட் செய்து காமெடிபீஸாகும் கந்தசாமி வடிவேல் ஒரு நல்ல உதாரணம். சில படங்களில் இந்த டிரேண்டின் உச்சமாக ஆண்டிஹீரோக்களை அவமானத்தில் தேய்த்து, மிதித்து, துவைத்து விடுவார்கள். உதாரணம்- பொதுஇடத்தில் லுச்சா போகும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் (போக்கிரி). 


5. ஹீரோ-ஆண்டிஹீரோ சமம் :

சமீபத்தில் அதிஹீரோயிஸம் காட்டும் படங்களின் தொடர்தோல்விகளால் ஆண்டிஹீரோக்களுக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. பாஸ் என்கிற பாஸ்கரன், தெனாவட்டு போன்ற படங்களில் ஹீரோவை நையாண்டி செய்யும் அளவிற்கு தைரியம் கொண்டவர்களாக வலம் வருகிறார்கள்.


6. இரட்டை ஹீரோ படங்கள்.

சில நேரங்களில் ஆண்டிஹீரோவாக காமெடியன்களிற்கு பதிலாக இன்னொரு ஹீரோவே பண்ணியிருப்பார். அன்பே சிவம் படத்தில் கடைசியில் ஆண்டிஹீரோ தான் ஹீரோயினை திருமணம் செய்கிறார். ஆண்டிஹீரோககள் மிகவலுவாக இருக்கும் படங்கள் இரட்டை ஹீரோக்கள் படங்களாக தோன்றுகிறது.

அதிஹீரோக்களின் வில்லத்தனம் :

ஆக வில்லனைப்போல் முக்கியமான ஆண்டிஹீரோக்களை பார்த்தோம். ஆண்டிஹீரோக்களின் பலம் ஒரு படத்தின் கதை எந்த அளவிற்கு யதார்த்தத்துடன் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது ரஜினியின் இடத்தை பிடிக்க நினைத்து, எத்தனை படங்கள் தொடர்ந்து தோற்றாலும் அதிஹீரோ படங்களை எடுக்கும் விஜய், (கொஞ்சகாலமாய்) சூர்யா போன்ற ஹீரோக்கள் பஞ்ச் டைலாக்குகள், 100 பேர்களை அடிப்பது பற்றவில்லை என்று இப்போது ஆண்டிஹீரோக்களையும் அசிங்கப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களைத்தான் இந்த ஹீரோக்கள் அசிங்க்கப்படுத்துகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

பிகு:. ஹிந்தியில் ஒரு ஹீரோ மட்டும் சந்தையில் ஒரு படத்தை தாங்கமுடியாது என்பதால் இரு/பல ஹீரோக்கள் கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். இது நாள் வரை இரு ஹீரோக்கள் கதைகளை மறுத்துவந்த தமிழ் ஹீரோக்கள் இப்போது தான் ஒன்றிரண்டு இரு ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹீரோக்களின் ஆதிக்கத்தை குறைக்க தாங்களே நடிகர்களாகும் டைரக்டர்கள் இந்த இரு ஹீரோ படங்களை எடுக்க முக்கியத்தவம் கொடுப்பது நல்ல யுக்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...