Monday, July 11, 2011

அவன்–இவன் : குட்டிச்சுவரின் அழகியல்அவன் இவன் திரைபடம் பற்றி பல விமர்சனங்களை ஊடகங்களில் படித்தேன்/பார்த்தேன். பெரும்பாலும் எல்லா விமர்சனங்களும் மேம்போக்காகவே இருப்பாதாக தோன்றுகிறது. ஆழமான கருத்துக்கள் தமிழ் படங்களில் இருக்காது என்று எல்லோரும் நினைப்பதாக தோன்றுகிறது. இயக்குனர் பாலாவும், வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனும் கொஞ்சம் ஆழமாக யோசித்து படத்தை உருவாக்கிருக்கிறார்கள் என்பதே என் வாதம்.

உலகத்திரைப்படங்களை பார்க்கும் முன்பு பல விமர்சகர்களின் கருத்துக்களை வாசித்துவிட்டு பிறகு படத்தை பார்த்தால் தான் படத்தின் உட்கருத்து ரசிகர்களுக்கு புலப்படும். இந்த பின்னணியில், ஊடகங்கள் சொல்ல மறந்த, சொல்லாமல் விட்டுவிட்ட விமர்சனமே இந்த பதிவு.

திரைக்கதை அமைப்பு :

அவன் இவன் பற்றி முதலில் சொல்லப்பட வேண்டியது படத்தின் திரைக்கதை அமைப்பு இது செக்காவ் (Chekov) போன்ற கதாசிரியர்கள் பாணி கதாப்பாத்திரம் சார்ந்த திரைக்கதை அமைப்பு ( Character-oriented-Plot Structure )..ஹீரோ அறிமுகம், வில்லன் அறிமுகம், பின் இருவருக்கும் இடையே மோதல், அதன் பின் தீர்வு என்ற வழக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டது அல்ல. பெரும்பாலான ரசிகர்களும் விமர்சகர்களும் உட்பட இந்த வித்தியாசத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. மேம்போக்காக பார்த்தால் விஷால்-ஆர்யா என்ற இரு கதாநாயகர்கள் ஒரு வில்லனை துவாம்சம் செய்வதே இந்த படத்தின் கதை. ஆனால் இந்த திரைக்கதையில் வேறு ஒரு பரிமாணம் அழமாக புதைந்துள்ளது.

அவன்-இவன் படம் ஒரு குட்டிச்சுவரின் மேல் டைட்டில்கார்ட் ஓடுவதுடன் ஆரம்பிக்கிறது. டைட்டில்கார்ட் எதற்கு குட்டிச்சுவரின் மேலாக காட்டப்படுகிறது? அதுவும் அந்த குட்டிச்சுவர் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விடுகிறது? குட்டிச்சுவர் இந்த படத்தின் உருவகம்.

திரைக்கதை அறிமுகம் (Setup)

படத்தின் நாயகன் ஹைனஸ் ஜமீன்தாரே. ஆரம்பத்திலேயே அமர்க்களமாக தேரில் ஏறி பவனி வருகிறார். தனது அதிகாரம் தன்னை விட்டு போய்விட்டது என்பதை உணராது “வெத்து பெருமையில் பிரம்மையில் (Delusion) வாழும் கதாபாத்திரம். இவரது வெத்துபெருமை தான் அந்த குட்டிசுவரின் குறியீடு. அறிமுக காட்சியிலேயே தேரில் பவனிவருகிறார். பிறகு படம் முழுவதும் அதே வரட்டு கெளரவ தோரணையில் தான் பவனி வருகிறார்.

இவரது 60வது பிறந்த நாள் விழாவில் ஆரம்பிக்கும் திரைக்கதை இவருக்குபின் அறிமுகம் ஆகும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒரு பிரம்மையில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிரம்மையின் பல்வேறு விதமான பரிமாணங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

விஷால் நடிகனாகும் பிரம்மையில் இருக்கும் ஒரு திருடன் அதுவும் ஒரு தொழில் தெரியாத திருடன். மாறுகண் வேறு (ஒரு நடிகனுக்கு கண்கள் மிகவும் முக்கியம்). விஷாலுக்கு மேலும் பால்-சார்ந்த குழப்பம் வேறு.

ஆர்யா கோழை : எல்லோரையும் கேலிசெய்யும் குதற்கவாதி (Cynic). “கும்பிட்ரேன் சாமிஎன்று நக்கலாக தனக்குதானே பெயர்வைத்துக் கொண்டவன்.

அம்பிகா ஆர்யாவின் அம்மாவின் வெத்து ஜம்பத்தை கண்டு தேவையில்லாமல் பொறாமைப்படுபவள்.

ஜனனி அய்யர் ஆழுமை-ஆண்மை மிக்க போலீஸ் தொழிலுக்கு சூழ்நிலை காரணமாக வந்துவிட்டு அந்த பதவியை தக்கவைத்துக் கொள்ள சாதுர்யமாக நடக்க முயற்சி செய்யும் வழுவில்லாத பெண்.

ஆர்யாவின் காதலி மதுசாலினி டுட்டோரியல் காலேஜை, காலேஜ் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார். தன்னை மிரட்டி குட்டிக்கரணம் அடிக்கவைத்த ஆர்யா தன்னிடம் காதலில் விழுந்தபின் அவரையே குட்டிக்கரணம் அடிக்கச்சொல்லும் கதாபாத்திரம்.


இன்ஸ்பெக்டர் சாதாரணமாக தோன்றும் இந்த கதாபாத்திரம் தான் ஹைனஸிற்கு எதிர்பதமான (anti-thetic) கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்கள் தங்களது தகுதியை மீறி பெருமைகொண்டவர்கள் என்றால் இவர் தனக்கிருக்கும் இன்ஸ்பெக்டர் பதிவிக்கான பெருமையை கூட காப்பாற்ற முடியாமல் தவிக்கும் கேரக்டர். ஹைனஸ் எடுத்த திருவிழாவிற்கு நேர்-எதிர் இவர் எடுக்கும் விழா திருடர்களுடன் சமாதான செய்துகொண்டு அவர்களுக்கு விருந்து வைக்கிறார்.


மேலும், ஹைனஸை சொத்து விசயத்தில் ஏமாற்றிய ஒரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்ப்டுகிறது. இவர் மூலம் தான் எதோ பிரச்சனை வரபோகிறது போன்ற ஒரு எதிர்பார்ப்ப உருவாகிறது.

தனக்கே உரிய பாணியில் காமெடி கலந்த சம்பவங்கள் கலந்த கதாபாத்திரங்களின் அணிவகுப்பில் முதல் பாதியின் பெரும்பான்மை காட்சிகள் சென்றுவிடுகிறன. ஆனால் கதாபாத்திரங்களின் அணிவகுப்பின் மூலம், வெத்துபெருமையாய் இருப்பதாலும் பிரச்சனை, பெருமையேயில்லாமல் இருப்பது பிரச்சனை என்ற புள்ளியில் வந்து நிற்கிறது திரைக்கதை.திரைக்கதை பிளாட் பாயிண்ட் ஒன்று (Plot Point #1)

இந்த சூழலில் ஹைனஸ் சில வெள்ளைக்காரர்களை காரில் ஏற்றிக்கொண்டு உலாவரும் போது, ஒரு வனவள போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பந்தாவாக தனக்கு வழிவிடச்சொல்ல, அந்த இன்ஸ்பெக்டரோ ஹைனஸை அவமானப்படுத்திவிடுக்கிறார். அவமானம் தாங்கமுடியாத ஹைனஸ் விஷாலையும், ஆர்யாவையும் தூண்டிவிட்டு இன்ஸ்பெக்டரை பழிதீர்த்துக்கொள்கிறார். ஆனால், இதனால் விஷாலும் ஆர்யாவும் பெரிய பிரச்சனையில் போலீஸிடம் மாட்டிக்கொள்கிறார்கள். ஹைனஸின் வெத்துபெருமையால் ஆரம்பித்த பிரச்சனை அப்பாவி இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் ஜனனி, அம்பிகா, ஆரியாவின் அம்மா என்று எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது.

பிளாட் பாயிண்ட் 2 (Plot Point #2)

இந்த கலவரங்களுக்குப் பின்னர், தனது தவறை ஹைனஸ் உணருகிறாரா என்றால் அது தான்.இல்லை. தேவையேயில்லாமல் அடிமாடு வியாபாரம் செய்யும் ஆர்.கே யை போலீஸில் மாட்டிவிடுகிறார். பெரிய சாதனை செய்ததாக டிவியில் பந்தா காட்டுகிறார். இதே சமயத்தில் ஹைனஸிற்கும் ஆர்யாவிற்கும் நடுவில் ஒரு பிரச்சனை உருவாகிறது. ஆர்யாவின் காதலியின் தந்தை தான் ஹைனஸை சொத்து விசயத்தில் ஏமாற்றிவர். இது தெரியவரும் போது ஹைனஸ் விஷாலையும் ஆர்யாவையும் விரட்டிவிடுகிறார். ஆனால், பிறகு சொந்தபந்தங்கள் வேண்டும் என்று வ்லியச் சென்று ஆர்யாவுடன் சமாதானம் செய்து கொள்கிறார்.


இந்த தருணத்தில் விடுதலையாகி வெளியே வ்ரும் ஆர்.கே, ஹைனஸை அவனது இடத்திற்கு கடத்திச் சென்று (நிர்வாணப்படுத்தி) அவமானப்படுத்திக் கொன்றுவிடுகிறான். ஹைனஸ் பெருமைக்காக செய்த ஒரு காரியம் அவருக்கு எதிர்பதமான விளைவுகளை கொடுக்கிறது (Irony).தீர்வு:

உண்மை தெரிந்த விஷால், ஹைனஸின் இறுதி ஊர்வலத்திற்கு முன்பே ஆர்.கே யை துவாம்சம் செய்கிறார். கதையின் ஆரம்பத்தில் ஹைனஸ் பெருமிதமாக வந்த தேரில் வைத்து, ஹைனஸுடன் ஆர்.கேயையும் உடன்கட்டை ஏற்றிவிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்.

வழக்கம் போல வரும் பழிவாங்கல் தீர்வு தான் மேம்போக்காக பார்த்தால். ஆனால் விஷால் ஏன் ஆர்.கேயை ஹைனஸிற்கு துணையாக அனுப்பவேண்டும்?

வெத்து-பெருமிதம் (Pride) என்பது மனிதர்கள் எல்லோருக்கும் உள்ள வியாதி. அதனால் மனிதர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்களை சார்ந்தவர்களையும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகிறார்கள். எத்தனை பெரிய மனப்பிரம்மை (delusion)  இருந்தாலும், ஒருவருக்கு தகுந்த துணையிருந்தால்போதும் - அதுவே அவருக்கு மருந்து.

இந்த கருத்தின் அடிப்படையில் தான், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்ட ஹைனஸும் ஆர்.கேயும் தான் ஒருவருக்கொருவர் சரியான துணை என்று சொல்லி ஆர்.கேயை ஹைனஸுடன் உடன்கட்டை ஏற்றுகிறார் விஷால்.

படத்தில் இடைச்சொருகல் போல வரும் நடிகர் சூரியாவின் மூலமும் வெத்துபெருமை பற்றி ஒரு வேறு ஒரு கருத்து / தீர்வு முன்வைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி என்னும் தனது சேவை தனது பெருமைக்காக செய்தாலும், நன்மையில் முடிவதால் அதில் தவறில்லை என்கிறார்.
பின் குறிப்பு :

1, இந்த படத்தின் காட்சிகள் உணர்வுபூர்வமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இது அறிவுபூர்வமாக பார்க்கவேண்டிய படம். உணர்வுபூர்வமாக அல்ல.

2. தற்பெருமை என்பது கிருஸ்துவர்களின் “ஏழு பாவங்கள்கருத்தில் முதன்மையான பாவமாக கருதப்படுவதாகும். இந்த “ஏழு பாவங்கள்கருத்து அகோரிகளிடமும் உள்ளது. அகோரிகளின் கருத்துகளில் அறிமுகம் உள்ள பாலாவின் படங்களில் அந்த கருத்துகள் பிரதிபலிப்பதில் ஆச்சரியம் இல்லை.
3. தனது திரைப்படத்தை பற்றி அதிகம் பாலா பேசுவது இல்லை. அதிகம் பேசி தேவையில்லாமல் ரசிகர்களை குழப்பாமல், அவரவர் புரிதலுக்கு ஏற்ப ரசித்துக்கொள்ளட்டும் என்று விட்டு விடும் பாலாவின் பாணி இதுவரை வெற்றிகரமாக தொடர்ந்துவருகிறது.

4. எந்த மேலைநாட்டு படங்களின் தாக்கம் இல்லாமல் அவைகளுக்கு இணையாக தமிழிலும் திரைபடம் உருவாக்கமுடியும் என்று நிருப்பித்ததற்கு பாலாவிற்கு ஒரு பலத்த சபாஷ்.

5. விஷால் மற்றும் ஜி.கே.குமார் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடும் படியாக இருக்கிறது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது கமலுக்கு இருந்த துணிச்சல் இந்த படத்தில் விஷாலுக்கும் ஜி.கே.குமாருக்கும் இருக்கிறது.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...