Monday, July 11, 2011

அவன்–இவன் : குட்டிச்சுவரின் அழகியல்



அவன் இவன் திரைபடம் பற்றி பல விமர்சனங்களை ஊடகங்களில் படித்தேன்/பார்த்தேன். பெரும்பாலும் எல்லா விமர்சனங்களும் மேம்போக்காகவே இருப்பாதாக தோன்றுகிறது. ஆழமான கருத்துக்கள் தமிழ் படங்களில் இருக்காது என்று எல்லோரும் நினைப்பதாக தோன்றுகிறது. இயக்குனர் பாலாவும், வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனும் கொஞ்சம் ஆழமாக யோசித்து படத்தை உருவாக்கிருக்கிறார்கள் என்பதே என் வாதம்.

உலகத்திரைப்படங்களை பார்க்கும் முன்பு பல விமர்சகர்களின் கருத்துக்களை வாசித்துவிட்டு பிறகு படத்தை பார்த்தால் தான் படத்தின் உட்கருத்து ரசிகர்களுக்கு புலப்படும். இந்த பின்னணியில், ஊடகங்கள் சொல்ல மறந்த, சொல்லாமல் விட்டுவிட்ட விமர்சனமே இந்த பதிவு.

திரைக்கதை அமைப்பு :

அவன் இவன் பற்றி முதலில் சொல்லப்பட வேண்டியது படத்தின் திரைக்கதை அமைப்பு இது செக்காவ் (Chekov) போன்ற கதாசிரியர்கள் பாணி கதாப்பாத்திரம் சார்ந்த திரைக்கதை அமைப்பு ( Character-oriented-Plot Structure )..ஹீரோ அறிமுகம், வில்லன் அறிமுகம், பின் இருவருக்கும் இடையே மோதல், அதன் பின் தீர்வு என்ற வழக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டது அல்ல. பெரும்பாலான ரசிகர்களும் விமர்சகர்களும் உட்பட இந்த வித்தியாசத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. மேம்போக்காக பார்த்தால் விஷால்-ஆர்யா என்ற இரு கதாநாயகர்கள் ஒரு வில்லனை துவாம்சம் செய்வதே இந்த படத்தின் கதை. ஆனால் இந்த திரைக்கதையில் வேறு ஒரு பரிமாணம் அழமாக புதைந்துள்ளது.

அவன்-இவன் படம் ஒரு குட்டிச்சுவரின் மேல் டைட்டில்கார்ட் ஓடுவதுடன் ஆரம்பிக்கிறது. டைட்டில்கார்ட் எதற்கு குட்டிச்சுவரின் மேலாக காட்டப்படுகிறது? அதுவும் அந்த குட்டிச்சுவர் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விடுகிறது? குட்டிச்சுவர் இந்த படத்தின் உருவகம்.

திரைக்கதை அறிமுகம் (Setup)

படத்தின் நாயகன் ஹைனஸ் ஜமீன்தாரே. ஆரம்பத்திலேயே அமர்க்களமாக தேரில் ஏறி பவனி வருகிறார். தனது அதிகாரம் தன்னை விட்டு போய்விட்டது என்பதை உணராது “வெத்து பெருமையில் பிரம்மையில் (Delusion) வாழும் கதாபாத்திரம். இவரது வெத்துபெருமை தான் அந்த குட்டிசுவரின் குறியீடு. அறிமுக காட்சியிலேயே தேரில் பவனிவருகிறார். பிறகு படம் முழுவதும் அதே வரட்டு கெளரவ தோரணையில் தான் பவனி வருகிறார்.

இவரது 60வது பிறந்த நாள் விழாவில் ஆரம்பிக்கும் திரைக்கதை இவருக்குபின் அறிமுகம் ஆகும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒரு பிரம்மையில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பிரம்மையின் பல்வேறு விதமான பரிமாணங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

விஷால் நடிகனாகும் பிரம்மையில் இருக்கும் ஒரு திருடன் அதுவும் ஒரு தொழில் தெரியாத திருடன். மாறுகண் வேறு (ஒரு நடிகனுக்கு கண்கள் மிகவும் முக்கியம்). விஷாலுக்கு மேலும் பால்-சார்ந்த குழப்பம் வேறு.

ஆர்யா கோழை : எல்லோரையும் கேலிசெய்யும் குதற்கவாதி (Cynic). “கும்பிட்ரேன் சாமிஎன்று நக்கலாக தனக்குதானே பெயர்வைத்துக் கொண்டவன்.

அம்பிகா ஆர்யாவின் அம்மாவின் வெத்து ஜம்பத்தை கண்டு தேவையில்லாமல் பொறாமைப்படுபவள்.

ஜனனி அய்யர் ஆழுமை-ஆண்மை மிக்க போலீஸ் தொழிலுக்கு சூழ்நிலை காரணமாக வந்துவிட்டு அந்த பதவியை தக்கவைத்துக் கொள்ள சாதுர்யமாக நடக்க முயற்சி செய்யும் வழுவில்லாத பெண்.

ஆர்யாவின் காதலி மதுசாலினி டுட்டோரியல் காலேஜை, காலேஜ் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார். தன்னை மிரட்டி குட்டிக்கரணம் அடிக்கவைத்த ஆர்யா தன்னிடம் காதலில் விழுந்தபின் அவரையே குட்டிக்கரணம் அடிக்கச்சொல்லும் கதாபாத்திரம்.


இன்ஸ்பெக்டர் சாதாரணமாக தோன்றும் இந்த கதாபாத்திரம் தான் ஹைனஸிற்கு எதிர்பதமான (anti-thetic) கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்கள் தங்களது தகுதியை மீறி பெருமைகொண்டவர்கள் என்றால் இவர் தனக்கிருக்கும் இன்ஸ்பெக்டர் பதிவிக்கான பெருமையை கூட காப்பாற்ற முடியாமல் தவிக்கும் கேரக்டர். ஹைனஸ் எடுத்த திருவிழாவிற்கு நேர்-எதிர் இவர் எடுக்கும் விழா திருடர்களுடன் சமாதான செய்துகொண்டு அவர்களுக்கு விருந்து வைக்கிறார்.


மேலும், ஹைனஸை சொத்து விசயத்தில் ஏமாற்றிய ஒரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்ப்டுகிறது. இவர் மூலம் தான் எதோ பிரச்சனை வரபோகிறது போன்ற ஒரு எதிர்பார்ப்ப உருவாகிறது.

தனக்கே உரிய பாணியில் காமெடி கலந்த சம்பவங்கள் கலந்த கதாபாத்திரங்களின் அணிவகுப்பில் முதல் பாதியின் பெரும்பான்மை காட்சிகள் சென்றுவிடுகிறன. ஆனால் கதாபாத்திரங்களின் அணிவகுப்பின் மூலம், வெத்துபெருமையாய் இருப்பதாலும் பிரச்சனை, பெருமையேயில்லாமல் இருப்பது பிரச்சனை என்ற புள்ளியில் வந்து நிற்கிறது திரைக்கதை.



திரைக்கதை பிளாட் பாயிண்ட் ஒன்று (Plot Point #1)

இந்த சூழலில் ஹைனஸ் சில வெள்ளைக்காரர்களை காரில் ஏற்றிக்கொண்டு உலாவரும் போது, ஒரு வனவள போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பந்தாவாக தனக்கு வழிவிடச்சொல்ல, அந்த இன்ஸ்பெக்டரோ ஹைனஸை அவமானப்படுத்திவிடுக்கிறார். அவமானம் தாங்கமுடியாத ஹைனஸ் விஷாலையும், ஆர்யாவையும் தூண்டிவிட்டு இன்ஸ்பெக்டரை பழிதீர்த்துக்கொள்கிறார். ஆனால், இதனால் விஷாலும் ஆர்யாவும் பெரிய பிரச்சனையில் போலீஸிடம் மாட்டிக்கொள்கிறார்கள். ஹைனஸின் வெத்துபெருமையால் ஆரம்பித்த பிரச்சனை அப்பாவி இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் ஜனனி, அம்பிகா, ஆரியாவின் அம்மா என்று எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது.

பிளாட் பாயிண்ட் 2 (Plot Point #2)

இந்த கலவரங்களுக்குப் பின்னர், தனது தவறை ஹைனஸ் உணருகிறாரா என்றால் அது தான்.இல்லை. தேவையேயில்லாமல் அடிமாடு வியாபாரம் செய்யும் ஆர்.கே யை போலீஸில் மாட்டிவிடுகிறார். பெரிய சாதனை செய்ததாக டிவியில் பந்தா காட்டுகிறார். இதே சமயத்தில் ஹைனஸிற்கும் ஆர்யாவிற்கும் நடுவில் ஒரு பிரச்சனை உருவாகிறது. ஆர்யாவின் காதலியின் தந்தை தான் ஹைனஸை சொத்து விசயத்தில் ஏமாற்றிவர். இது தெரியவரும் போது ஹைனஸ் விஷாலையும் ஆர்யாவையும் விரட்டிவிடுகிறார். ஆனால், பிறகு சொந்தபந்தங்கள் வேண்டும் என்று வ்லியச் சென்று ஆர்யாவுடன் சமாதானம் செய்து கொள்கிறார்.


இந்த தருணத்தில் விடுதலையாகி வெளியே வ்ரும் ஆர்.கே, ஹைனஸை அவனது இடத்திற்கு கடத்திச் சென்று (நிர்வாணப்படுத்தி) அவமானப்படுத்திக் கொன்றுவிடுகிறான். ஹைனஸ் பெருமைக்காக செய்த ஒரு காரியம் அவருக்கு எதிர்பதமான விளைவுகளை கொடுக்கிறது (Irony).



தீர்வு:

உண்மை தெரிந்த விஷால், ஹைனஸின் இறுதி ஊர்வலத்திற்கு முன்பே ஆர்.கே யை துவாம்சம் செய்கிறார். கதையின் ஆரம்பத்தில் ஹைனஸ் பெருமிதமாக வந்த தேரில் வைத்து, ஹைனஸுடன் ஆர்.கேயையும் உடன்கட்டை ஏற்றிவிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்.

வழக்கம் போல வரும் பழிவாங்கல் தீர்வு தான் மேம்போக்காக பார்த்தால். ஆனால் விஷால் ஏன் ஆர்.கேயை ஹைனஸிற்கு துணையாக அனுப்பவேண்டும்?

வெத்து-பெருமிதம் (Pride) என்பது மனிதர்கள் எல்லோருக்கும் உள்ள வியாதி. அதனால் மனிதர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்களை சார்ந்தவர்களையும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகிறார்கள். எத்தனை பெரிய மனப்பிரம்மை (delusion)  இருந்தாலும், ஒருவருக்கு தகுந்த துணையிருந்தால்போதும் - அதுவே அவருக்கு மருந்து.

இந்த கருத்தின் அடிப்படையில் தான், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்ட ஹைனஸும் ஆர்.கேயும் தான் ஒருவருக்கொருவர் சரியான துணை என்று சொல்லி ஆர்.கேயை ஹைனஸுடன் உடன்கட்டை ஏற்றுகிறார் விஷால்.

படத்தில் இடைச்சொருகல் போல வரும் நடிகர் சூரியாவின் மூலமும் வெத்துபெருமை பற்றி ஒரு வேறு ஒரு கருத்து / தீர்வு முன்வைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி என்னும் தனது சேவை தனது பெருமைக்காக செய்தாலும், நன்மையில் முடிவதால் அதில் தவறில்லை என்கிறார்.




பின் குறிப்பு :

1, இந்த படத்தின் காட்சிகள் உணர்வுபூர்வமாக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இது அறிவுபூர்வமாக பார்க்கவேண்டிய படம். உணர்வுபூர்வமாக அல்ல.

2. தற்பெருமை என்பது கிருஸ்துவர்களின் “ஏழு பாவங்கள்கருத்தில் முதன்மையான பாவமாக கருதப்படுவதாகும். இந்த “ஏழு பாவங்கள்கருத்து அகோரிகளிடமும் உள்ளது. அகோரிகளின் கருத்துகளில் அறிமுகம் உள்ள பாலாவின் படங்களில் அந்த கருத்துகள் பிரதிபலிப்பதில் ஆச்சரியம் இல்லை.
3. தனது திரைப்படத்தை பற்றி அதிகம் பாலா பேசுவது இல்லை. அதிகம் பேசி தேவையில்லாமல் ரசிகர்களை குழப்பாமல், அவரவர் புரிதலுக்கு ஏற்ப ரசித்துக்கொள்ளட்டும் என்று விட்டு விடும் பாலாவின் பாணி இதுவரை வெற்றிகரமாக தொடர்ந்துவருகிறது.

4. எந்த மேலைநாட்டு படங்களின் தாக்கம் இல்லாமல் அவைகளுக்கு இணையாக தமிழிலும் திரைபடம் உருவாக்கமுடியும் என்று நிருப்பித்ததற்கு பாலாவிற்கு ஒரு பலத்த சபாஷ்.

5. விஷால் மற்றும் ஜி.கே.குமார் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடும் படியாக இருக்கிறது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது கமலுக்கு இருந்த துணிச்சல் இந்த படத்தில் விஷாலுக்கும் ஜி.கே.குமாருக்கும் இருக்கிறது.


Thursday, March 17, 2011

தமிழ் ரொமான்ஸ் பட கதை மூலங்கள்



தமிழ் சினிமாவின் இசையும் பாடல்களும் இன்றும் கர்னாடக இசையின் ராகங்களை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. மேற்கத்தைய இசையின் தாக்கம் இருந்தாலும் தமிழ் சினிமாவின் இசை ராகங்களிலிருந்து பெரிதாக விலகவில்லை. ஆனால் கதைகள்?

காளிதாஸின் சகுந்தலை கதையின் தாக்கம் இன்றும் இருப்பதை பார்க்கிறோம். ஆனால் சகுந்தலையை தவிர்த்து வேறு பாரம்பரிய கதைகள் இன்றைய சினிமாவில் இருக்கிறதா? 

விக்ரமாத்தித்தன் வேதாளம் கதை

ஒரு மகனும் அவனது தந்தையும் ஆற்றை கடந்து மணலில் நடந்து வரும்போது இரண்டு பெண்கள் காலடி தடயங்களை பார்க்கிறார்கள். அப்போது தந்தை மகனிடம், சிறிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள். பெரிய காலடி தடயங்களை கொண்ட பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று கூற மகனும் சம்மதிக்கிறான். இருவரும் அந்த பெண்களை தேடிச் செல்கின்றனர். பல நாட்கள் தேடி அந்த பெண்களை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். 

ஆனால் அந்த பெண்களை பற்றிய ஒரு உண்மை அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சிறிய காலடி தடயங்களை கொண்ட பெண் தான் பெரிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணின் தாய். இப்போது தந்தையும் மகனும் என்ன செய்வது என்று குழம்புகிறார்கள். ஆனால் பிறகு முதலில் பேசியபடியே பெரிய காலடி கொண்ட பெண்ணை (மகளை) தந்தையும், சிறிய காலடி கொண்ட பெண்ணை (அம்மாவை) மகனும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.


இந்த கதையை சொல்லிவிட்டு, விக்கிரமாதித்தனை பார்த்து வேதாளம் கேட்கிறது “கல்யாணம் ஆனபின இந்த பெண்களுக்கு குழந்தை பிறந்தால், குழந்தைகளுக்கும் அந்த ஆண்களுக்கும் இடையிலான உறவு என்ன?



இந்த முடிச்சை ஆதாரமாக கொண்டு வந்த படம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். இந்த விடுகதையை கூட கதையில் விவாதிக்கப்படுகிறது. அபூர்வ ராகங்கள் போல பாரம்பரிய கதைகளை ஆதாரமாக கொண்ட படங்கள் எவை?

பிற கதைகள்


மணிரத்னத்தின் ரோஜா சத்தியவான்-சாவித்திரி கதையை சார்ந்துள்ளது என்று பேசப்பட்டது. ஆனால் சத்தியவான்-சாவித்திரி கதையின் சாயல் ரோஜாவில் மிகக் குறைவே. மாதவனின் நள-தமயந்தியும் இதுபோல் பெயரளவில் தான் தாக்கம்.




இன்று வரும் தமிழ் ரொமான்ஸ் படங்களின் கதைகளின் ஆதாரங்கள் யாவை? அத்தகைய ஆதாரக் கதைகளை ஒரு தொடர்பதிவாக எழுத உள்ளேன்.

                                   ...மீதி அடுத்த பதிவில்.

Monday, March 14, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 2


முன்னுரை: 

திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைக்கின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.



எங்கிருந்தோ வந்தாள்:


காதலின் ஒரு முக்கிய அம்சம் காதலின் நினைவுகள். நினைவுகள் இருக்கும் வரை தான் காதலும். ஆனால் அந்த நினைவுகள் வலுவிழந்தால் காதலும் வலுவிழந்து விடும் என்ற கருத்தை ஆதாரமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன.

இந்த வரிசையில் சிவாஜி-ஜெயலலிதா நடித்து மிகப் பெரிய ஹிட்டன ரொமன்ஸ் படம் எங்கிருந்தோ வந்தாள். படத்தின் மூலக்கதை ஒரு வங்க மொழி நாவலே. பைத்தியமாக இருக்கும் நாயகன், அவன் பைத்தியமாக இருந்த காலத்தில் அவனை அரவணைத்த நாயகியை. பைத்தியம் தெளிந்தவுடன் மறந்துவிடுகிறான். ஆனால் பல சோதனைக்கு பிறகு இணைகிறார்கள்.

இந்த மூலக்கதையின் நாயகன் பாத்திரத்தை நாயகியாகவும், நாயகியின் பாத்திரத்தை நாயகனாகவும் மாற்றி கதையமைத்து வெளிவந்த கமல்-ஸ்ரீதேவி படம் பாலும்கேந்திராவின் மூன்றாம் பிறை. கதையில் கமலின் பாத்திரத்தின் காதலோடு சில்க் ஸ்மிதா  பாத்திரத்தின் காமத்தை ஒரு அழகான காண்ட்ராஸ்ட் அமைத்தது மூன்றாம் பிறையின் சிறப்பு அம்சம் எனலாம். (இந்த ட்ராக்த்தான் படத்தை ஓடவைத்தது என்ற வாதம் ஓன்றும் உள்ளது).



நினைவுகள் மறதி நோயான அம்னிஷியாவை காதல் மறதிக்கான காரணமாக வைத்து உருவாக்கப்பட்ட ரோமன்ஸ் படங்கள் தமிழில் ஏகத்திற்கு இருக்கின்றன. கணவனை மறந்து இன்னொருவரை
மணப்பதால் உருவாகும் முக்கோண காதல் கதைகள் ஒரு தனி ஜான்ரே அளவிற்கு அரைத்த மாவையே அரைத்து ஏகத்திற்கு படங்கள் வந்துள்ளன். உதாரணம் சிவக்குமார்-ஜெய்ஸ்ரீ நடித்த யாரோ எழுதிய கவிதை. 







இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ்

காதல் மறதியை மையமாக, ஆனால் இந்த காலத்திற்கு ஏற்றவாறு ஒரு வித்தியாசமான அம்னிசியாவுடன் கலந்து எடுத்த படம் ஜெயம் ரவியின் தீபாவளி (50 First Dates ஆங்கில படத்தின் சாயலும் இருக்கிறது).



எங்கிருந்தோ வந்தாளின் ஆதாரம் :

ஆனால் எங்கிருந்தோ வந்தாள் கதையின் அம்சங்களும் கூட வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அதுவும் காளிதாஸின் சகுந்தலை தான். சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.




சகுந்தலையின் கதை காலத்திற்கு ஏற்ப எப்படியெல்லாம் மாறி. மருவி வருகிறது என்பது ஒரு வியப்பின் சரித்திரக் குறியீடு தானே?

Tuesday, March 1, 2011

தமிழ் ரொமான்ஸ் படங்களின் மாஸ்ட்டர்-பீஸ் – 1

முன்னுரை:




திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் ராகங்களின் அடிப்படையில் தான் அமைகின்றன. ராகங்களை அறிந்தால் பாடல்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, ரசிகனாக ஒரு பாடலின் நுட்பங்களை ரசிக்கவும் உதவும். ஆனால் இந்த ராகங்கள் தொன்றுதொட்டு வரும் ஆதிகால பாடல்களின் ஒரு வித தொகுப்பே.

அதுபோல கதைகளும் பெரும்பாலும் தொன்றுதொட்டு வரும் ஆதார கதைகளை (ராகங்களுக்கு இணையானவை) தழுவியும்/மருவியும் வருகின்றன. ஒரு கதையின் ஆதாரத்தை அறிந்தால் படைப்பாளியின் க்ரியேட்டிவிட்டியை/ புத்திசாலித்தனத்தை ரசிக்க முடியும். இந்த தொடரில் தமிழின் சில ஆதார ரொமான்ஸ் கதைகளையும் அதன் மரபில் வரும் சமீபத்திய படங்களையும் விவாதிக்கலாம்.

ஒரு ஆதாரக்கதை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி மருவுகிறது என்பதை கவனித்தால் அந்த-அந்த காலகட்டத்தின் கலாச்சாரமும், சிந்தனைகளும், பேஷன்களும், டிரெண்ட்களும் வெளிப்படும். ஒரு ஆதாரக்கதையை இன்றைய காலகட்டத்தின் டிரெண்ட்டிற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்வது ஒரு கதாசிரியரின் சாமர்த்தியம். ஒரு ராகத்தை இசையமைபாளர் திருடிவிட்டார் என்று சொன்னால் எந்த அளவு அபத்தமாக இருக்குமோ அது போலத்தான் ஒரு எழுத்தாளர் ஒரு ஆதார கதையை திருடிவிட்டார் என்பதும்.


தேவதாஸ் :



என்னை பொருத்தவரை ஒரு படம்/கதை எப்போது மாஸ்ட்டர்பீஸாகிறது என்றால் அந்த படத்தின் கதையை தழுவி பல கதைகள் (பல ஆண்டுகள் கழித்தும்) வரும்போதுதான். அந்த வகையில் தேவதாஸ் கதை தமிழில் மட்டுமல்ல இந்திய ரோமான்ஸ் படங்களிலும் ஒரு மைல்கல்-மாஸ்ட்டர்பீஸ். காதல் தோல்வியின் முதல் அடையாளம் தாடி என்றால, இரண்டாவது அடையாளம் தேவதாஸ். அந்த அளவு தேவதாஸ் பிரபலம். இந்த தேவதாஸின் பாதிப்பில் பல ரொமான்ஸ் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில சிலவற்றை பார்ப்போம்.



சமீபத்தில் கூட தேவதாஸ் கதை பல முறை ரீமேக் ஆகியிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸும் அனுராக் காஸியாப்பின் தேவ்-டி யும் இதில் முக்கியமானவை. ஆனால் இவை இரண்டும் நேரடி ரீமெக்குகள். நேரடி ரீமேக்கில்லாமல் தேவதாஸின் சாரத்தை எடுத்துக்கொண்டு கொஞ்சம் மாற்றி, வேறு முலாம் பூசப்பட்ட தழுவல் படக் கதைகளை பாப்போம்.



அதற்கு அந்த படத்தின் முக்கிய சாராம்சத்தை பார்க்கவேண்டும். தேவதாஸ் படத்தின் முக்கிய சாராம்சங்கள் – பால்யபருவ காதல் ஜோடி, ஏழை-பணக்காரன் ஏற்ற தாழ்வு காதலில் ஏற்படுத்தும் பிரச்சனை, காதலினால் பெரிய இடத்தில் கல்யாணம் பேசச்சென்று- அதனால் ஏற்படும் (பெற்றோர்க்கு) அவமானம், காதல் நிராகரிப்பு –பின் நிராகரித்த அதே பழைய காதலியை நினைத்து வாடுவது, (காதல் தோல்வியால் தன்னையே அழித்துக்கொள்வது ஆகியன.





வசந்த மாளிகையில் பால்யபருவ காதல் அம்சத்தை தவிர்த்து மற்ற அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. இதில் அவமானம் பெற்றோருக்கு அல்ல - காதலிக்கே நேரடியாக ஏற்படுகிறது. வசந்த மாளிகை படத்துடன் கான்சரை சேர்த்தால் – வாழ்வே மாயம். வாழ்வே மாயத்தில் ஹீரோவை பாடகனாக்கினால் – பயணங்கள் முடிவதில்லை. கல்யாணத்திற்கு பேசச்செனற் தாய்க்கு அவமானம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் வேறு மசாலா கலந்தால் – கிழக்கு வாசல்.







தேவதாஸின் ஆதாரம் :

ஆனால் தேவதாஸ் கதையின் அம்சங்களே வேறொரு பழைய கதையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது - அது காளிதாஸின் சகுந்தலை. சகுந்தலையில் முக்கிய அம்சங்கள் : துஷ்யந்தன் சகுந்தலையுடனான தன் காதலை மறந்துவிடுகிறான், சகுந்தலையை அவையில் வைத்து அவமானப்படுத்துகிறான், பிறகு சகுந்தலைக்கு தான் கொடுத்த மோதிரத்தை பார்த்து காதல் ஞாபகம் வந்தபின் சகுந்தலையை தேடிச் செல்கிறான்.



சகுந்தலையின் சாரம் தேவதாஸில் கொஞ்சம் மருவி வெளிப்படுவது தெரிகிறதா? தேவதாஸை போல் இல்லாமல் சகுந்தலையின் சமீப கால டிட்டோ பதிவு சுபாஸ் கெய்யின் தாள் ( Taal ).

இன்றைய காலகட்டத்திற்கான ரீமிக்ஸ் :

ஹிந்தியில் தேவதாஸின் சாரம் தொடர்ந்து பல படங்களில் வருகிறது. உதாரணமாக Bachna Ae Haseeno படத்தில் ஹீரோ ஒரு பெண்ணை காதலித்து மறந்துவிட்டு, பிறகு வேறு பெண்ணை காதலிக்கிறான், பிறகு அந்த பெண்ணையும் மறந்துவிட்டு வேறு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் ஹீரோவை நிராகரிக்கும்போது காதல் நிராகரிப்பின் வலியை உணர்ந்து, தான் மற்ற பெண்களுக்கு இழைத்த கஷ்டத்தை உணர்ந்து, ஹீரோ அவர்களிடம் மன்னிப்பு கேட்க திரும்பிச் செல்கிறான்.



Bachna Ae Haseeno – என்னை பொருத்தவரை மாறிக்கொண்டே இருக்கும் இன்றையை கால காதலை பிரதிபலிக்கும் ஒரு புத்திசாலித்தனமான தேவதாஸ் கதை.

Sunday, February 27, 2011

பதிவர் பலம்–தென்மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமியின் சர்டிபிகேட்


”தென்மேற்கு பருவக்காற்று படம் மக்களிடையே சென்றடைய பதிவர்களின் விமர்சனங்கள் மிகவும் உதவின. இதுபோன்ற சிறு படங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பதிவர்களுக்கு இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு உதவிய பதிவர்களுக்கு என் நன்றி”

- 26.02.2011, டிஸ்கவர் புக் பேலஸில் சீனு ராமசாமி கூறியது.


தமிழ் திரையுலகில் ஒரு ரசனை மாற்றத்தை பதிவர்கள் முயன்றால் நிச்சயம் கொண்டுவர முடியும் – என்ற கதை முன்னேற்றக் கழகத்தின் வாதத்தை சீனு ராமசாமி வழிமொழிந்துள்ளார். இதற்கு அவருக்கு ஒரு நன்றி.

பிரபல தொலைக்காட்சி சேனல்கள் இப்போது திரை விநியோகஸ்தர்களாக பரிணமித்து, தாங்கள் விநியோகிக்கும் படங்களை இடைவிடாத விளம்பரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். இந்த முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில் தோற்றாலும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவது சிறு படங்கள் தான்.

இன்று ஒரு படம் தயாரிப்பதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம் அதற்கு விளம்பரம் கொடுக்க ஆகும் செலவு. இதனால் கதை சார்ந்த சிறு படங்கள் தயாரவதற்கும், வெளிவருவதற்கும் பெரும் இடையூறுகள் எற்பட்டுள்ளன. இந்த சூழலில் கதை சார்ந்த சிறு படங்களை ஆதிர்ப்பதன் மூலம் பதிவர்கள் நல்ல கதைகள் கொண்ட படங்கள் வருவதற்கு வழிவகுக்கமுடியும்.

- கமுக கொ.ப.செ.

Saturday, February 26, 2011

பதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.

ராதா மோகன் vs சங்கர்




சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்று சொல்லி பல கோடிகளை கொட்டி, பலத்த ஆரவாரத்துடன் வந்தது சங்கரின் ரோபோ. ஆனால் 20-30 வருடங்களுக்கு வந்த எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படத்தின் கதைக்கும் எந்திரன் கதைக்கும் பெரிய இடைவெளியில்லை என்பதை ஒரு பதிவர் பதிவுசெய்திருந்ததை பலர் படித்திருப்பார்கள். வழக்கம் போல பாடல்கள், ஹீரோவை தவிர மத்தவர்கள் எல்லோரும் டம்மிபீஸ்கள் என்ற வகையில் காமெடி, அயிரம் பேர்களை அடித்தாலும் திருப்தி படாத அதீத ஆக்‌ஷன்.. கேட்டால் இது கமெர்ஷியல் படம். இப்படித்தான் எடுக்க முடியும் என்ற சப்பைக்கட்டு. A-B-C  என்று எல்லா சென்டர்களிலும் வெற்றியடைய சங்கரின் பார்மெட்டை விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழ் இயக்குனர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

ஆனாலும் என்ன? இன்று தமிழ் திரையுலகில் இருக்கும் கமர்ஷியல் உதவி டைரக்டர்களின் ஆதர்ஷம் சங்கர் தான். சங்கரை போல ஒரு மெகா பட்ஜெட் படமாவது பண்ணினால்தான் ஜென்மபிராப்தி என்று இருக்கிறார்கள். சங்கரைப் போல படம் பண்ணவேண்டும் என்று மினிமம் 10-15 கோடி பட்ஜெட்டில் கதை பண்ணிக்கொண்டு வாய்ப்புக்காக 10-15 வருடங்களாக காத்திருக்கும் உதவி இயக்குனர்களை எனக்கு தெரியும். நட்சத்திரங்களின் கால்ஷீட் இல்லாமல் 10-15 கோடி பட்ஜெட்டில் எல்லாம் படம் செய்யமுடியாது. அறிமுக நடிகர்கள் முதல் படத்திலேயே சாகசம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த காரணத்தால் (திறமையிருந்தும்) நட்சத்திர நடிகர்களின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் பட்டாளத்தின் பாடு சொல்லிமாளாது.


இந்த கலாச்சார சூழலில் வந்துள்ளது ராதாமோகனின் பயணம். ராதா மோகனின் பயணம் தமிழில் ஒரு மிக நல்ல வரவேற்க்கத்தக்க முயற்சி. ஏனென்றால் பாடல்கள், கதையுடன் ஒட்டாத காமெடி ட்ராக்குகள் ஆகியவை இல்லாமல், ஒரு சுத்த ஆக்‌ஷன் திர்ல்லர் படம் தமிழில் எடுக்கமுடியாது என்று மொன்னையாக வாதத்தை வைத்து இனியும் எந்த டைரக்டரும் தப்பித்துக்கொள்ள முடியாது. அதேபோல எல்லா கேரக்டர்களும் கண்ணியமாக நடத்தப்பட்டும், யாரும் புண்படுத்தப்படாமலும் எல்லோரும் சிரிக்கும் வகையில் இண்டெலிஜண்டாக காமெடி பண்ணாலாம் என்பதை நிருப்பித்து இருக்கிறார் ராதாமோகன். ஆக்‌ஷன் ஹீரோவும் யதார்த்தை மீறிய பாத்திரம் இல்லை. கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டது அல்ல பயணம். சன் டீவியினரோ கலைஞர் டீவியினரோ விநியோகம் செய்துள்ள படம் கூட இல்லை. மீடியம்/லோ பட்ஜெட்டிலும் A-B-(கொஞ்சம்)C சென்டர்களில் ஜெயிக்கும் ஒரு பார்மெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்.

ராதாமோகனின் வளர்ச்சிப்பாதையையும் கவனிக்கவேண்டும். சங்கர் போல் இல்லாமல், லோ-பட்ஜெட் படத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, இன்று முதல்தர டைரக்டர் அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார்.

பயணம் படம் வருவதற்கு முன்னால்,  இந்த ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் கதையை அறிமுக இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருந்தால் அவர் என்ன கதியாயிருப்பார்கள் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியும். 
 




இனிமேல் அப்படி இல்லை. உதவி இயக்குனர்கள் தைரியமாக பயணத்தை உதாரணமாக காட்டி, யத்தார்த்த ஆக்‌ஷன் கதைகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லலாம். ஒரு புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு ரோல்மாடலாக இருக்கப்போகிறார் ராதாமோகன். தயாரிப்பாளர்களும் ராதாமோகன் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவேண்டும். பாடல்/டான்ஸ்/தனி-காமெடி இல்லாமலும் கமர்ஷியல் படம் எடுக்கலாம் என்பது புரிந்து கொண்டால் ஷேமம்.

ஆக அடுத்த தலைமுறை இயக்குனர்களிடம் சங்கரா இல்லை ராதாமோகனா யார் வழியில் போவது என்று ஒரு போராட்டம் நடக்கப்போகிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...